நள்ளிரவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டி ச.ம.க.வுக்கு 40 தொகுதிகள்; ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகள்


நள்ளிரவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டி ச.ம.க.வுக்கு 40 தொகுதிகள்; ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகள்
x
தினத்தந்தி 8 March 2021 10:45 PM GMT (Updated: 2021-03-09T04:15:18+05:30)

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் நேற்று நள்ளிரவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அதில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மக்கள் நீதிமய்யம் 154 இடங்களில் போட்டியிடுகிறது.

சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சியும், தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர்.

154 இடங்களில் போட்டி

கூட்டணி உறுதியான நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள தொகுதிகளுக்கு கூட்டணி கட்சிகள் இடையே பலர் விருப்பம் தெரிவித்ததால் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது. நேற்று இரவு 9 மணிவரை தொகுதி பங்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாகய கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச் செயலாளர் சி.கே.குமரவேலை நேற்று இரவு சந்தித்தனர். நள்ளிரவு நெருங்கிய நேரத்தில் இந்த 3 காட்சிகளுக்கு இடையேயும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அதன்படி மக்கள் நீதிமய்யம் கட்சி 154 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 40 இடங்களிலும் போட்டியிடுவது என தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் 3 பேரும் கையெழுத்திட்டனர்.

மாற்றத்தை கொண்டு வர

“தமிழகத்தில் ஒட்டுமொத்த மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், தமிழக மக்கள் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் 3 பேரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

வேறுசில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பதாக மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதன் மூலம் முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதிமய்யம் நாளை (10ந்தேதி) அறிவித்துவிடும் என்று தெரிகிறது.

Next Story