தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், இல்லை என்றால் அதிமுக பதிலடி கொடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது துரதி ஷ்டவசமான நடவடிக்கை. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு கீழ்த்தரமாக பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்களிடம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் இன்றுதான் தீபாவளி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவும். நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் கூட்டணியில் இருந்து விலகல். தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த முடிவு எடுத்துள்ளார் என கூறினார்.
தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவும் என சுதிஷ் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது துரதி ஷ்டவசமான நடவடிக்கை. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு கீழ்த்தரமாக பேசக்கூடாது.
கூட்டணியில் இருந்த போதே சுதீஷ் பேசிய பேச்சுகளை பொறுத்துக் கொண்டோம். ஏன் என்னால் தேமுதிகவை வாங்கு வாங்கு என்று வாங்க முடியாதா? .
கீழ்த்தரமான அரசியலை தொடர்ந்தால் தேமுதிகவிற்கு எங்களால் பதிலடி கொடுக்க முடியும். தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுக தான்.
தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்துவிட்டு சுதீஷ் பேசுகிறார் . 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெல்லும்.
அதிமுக தோற்கும் என்று கூறும் சுதீஷ் என்ன ஜோசியரா?. தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், இல்லை என்றால் அதிமுக பதிலடி கொடுக்கும்.
தேமுதிகவின் செல்வாக்கு, வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தோம். தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டுப் பெறுவது தான் புத்திசாலித்தனம்.
புத்திசாலித்தனத்துடன் தேமுதிக செயல்படவில்லை என்றால் என்ன செய்வது?. கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க.
பாமகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கீடு செய்தோம். பாஜகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கீடு செய்தோம்.
தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை. கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவிற்கு தான் தற்போது பாதிப்பு .
அதிமுக குறித்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசுவதை பொருட்படுத்தவில்லை. தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை என்று முடிவெடுத்த பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும் என கூறினார்.
Related Tags :
Next Story