சட்டசபை தேர்தல்: நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது..?


Image courtesy : @arivalayam
x
Image courtesy : @arivalayam
தினத்தந்தி 9 March 2021 4:40 PM GMT (Updated: 9 March 2021 4:40 PM GMT)

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தல்  ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த  நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுககூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ்க்கு 25 தொகுதிகள், மதிமுகவுக்கு 6, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3, மனித நேய மக்கள் கட்சி  2, தமிழக   வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில் 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 13 கூட்டணி   வேட்பாளர்கள் உதயசூரியன் போட்டியிடுகிறது. திமுக மற்று கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மொத்தம் 187 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 

இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் இன்று காலை முதல் கூட்டணி கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சுப்பராயன் தலைமையிலான குழுவினர் திமுக குழுவினருடன்  பேச்சுவார்த்தையை நடத்தினர். தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனைத்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுகிறார்.

இதைப்போல், தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகரி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் குறித்து நாளை நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story