நன்றி மறந்து பேசுவதா? “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதால் தே.மு.தி.க.வுக்குதான் பாதிப்பு” அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்


நன்றி மறந்து பேசுவதா? “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதால் தே.மு.தி.க.வுக்குதான் பாதிப்பு” அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
x
தினத்தந்தி 9 March 2021 11:01 PM GMT (Updated: 9 March 2021 11:01 PM GMT)

‘அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதால் தே.மு.தி.க.வுக்கு தான் பாதிப்பு' என்றும், ‘தே.மு.தி.க. நன்றி மறந்து பேசுவது தவறு' என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றும் தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் கூறியிருக்கிறாரே?

பதில்:- தே.மு.தி.க. நன்றி மறந்து பேசக்கூடாது. அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய கட்சி. எனவே சுதீசின் இந்த கருத்து மக்கள் சிரிக்கக்கூடிய வகையில்தான் இருக்கிறது. தமிழகத்தை மீண்டும் ஆட்சி செய்யப்போவது அ.தி.மு.க. அரசுதான் என்பது தே.மு.தி.க.வுக்கு நன்றாக தெரியும். வெறுப்பு, கோபத்தின் உச்சகட்டமாக நிதானத்தை நாம் இழந்து விடக்கூடாது. ஆத்திரத்தில் வார்த்தைகளை உதிர்த்துவிட்டால் அதை திரும்பப்பெற முடியாது. எனவே அந்த பக்குவம் முதலில் அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டும். அரசியல்வாதியாக இருந்தால் தே.மு.தி.க.வினருக்கும் அது இருக்கவேண்டும். இல்லையென்றால் இருக்காது.

நாகரிகமாக போய்விட வேண்டும்

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலக என்ன காரணம்?

பதில்:- கட்சியின் செல்வாக்கு, பலம், அவர்கள் பெற்ற வாக்குகள் என்பதை கணக்குப்போட்டுதான் தொகுதிகள் வழங்கப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்பு பெரியளவில் இருந்தால் நாங்கள் என்ன செய்யமுடியும்? கட்சியின் பலத்துக்கு ஏற்றவகையில்தான் தொகுதிகளை நிர்ணயிக்கிறோம். அதை ஏற்றுக்கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம். ஆனால் அந்த புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் ரொம்ப கஷ்டம்தான்.

கேள்வி:- பா.ம.க.வின் ‘சிலீப்பர் செல்' போல கே.பி.முனுசாமி செயல்படுகிறார் என சுதீஷ் கூறியுள்ளாரே?

பதில்:- தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை என்றால் நாகரிகமாக போய்விட வேண்டும். ‘எங்கிருந்தாலும் வாழ்க' என நான் எவ்வளவு நாகரிகமாக பேசுகிறேன். அதுதான் பக்குவப்பட்ட அரசியல்வாதிக்கு அழகு. அது அவர்களுக்கு தெரியவில்லை.

தே.மு.தி.க.வுக்கே பாதிப்பு

கேள்வி:- தே.மு.தி.க.வின் விலகல் அ.தி.மு.க.வுக்கு பலவீனமா?

பதில்:- எந்தவிதத்திலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. தே.மு.தி.க.வுக்குத்தான் பாதிப்பு. தே.மு.தி.க.வுக்கு அரசியலில் அங்கீகாரம் கொடுத்தது அ.தி.மு.க. சட்டமன்றத்தில் தே.மு.தி.க. நுழைந்தது ஜெயலலிதாவால்தான். அதை திரும்பிப்பார்க்க வேண்டும். அந்த நன்றி இருக்கவேண்டும். நன்றி இல்லாமல் பேசுவது என்பது தவறு. தமிழக மக்களுக்கு எல்லாமே நன்றாக தெரியும். எனவே அந்த பாதிப்பு தே.மு.தி.க.வுக்கு இருக்கும்.

கேள்வி:- தே.மு.தி.க. முடிவை மாற்றி திரும்ப கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா?

பதில்:- நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. தே.மு.தி.க.தான் ‘குட்பை’ சொல்லியிருக்கிறது. எனவே திரும்பி வருவது தொடர்பாக தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கேற்ப நாங்கள் யோசித்து முடிவு எடுப்போம்.

அளந்து பேசவேண்டும்

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு இனி இறங்குமுகம் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியிருக்கிறாரே?

பதில்:- இது தே.மு.தி.க.வின் வெறுப்புத்தன்மையை காட்டுகிறது. ‘சின்னத்தம்பி'யின் அந்த கருத்து நிச்சயம் கண்டிக்கத்தக்கது. அதை பெரிதாக நாங்கள் பொருட்படுத்தவில்லை. பக்குவப்பட்ட அரசியல்வாதிகள் பக்குவமான கருத்துகளை சொல்வார்கள். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆட்சி மலரும். இதுதான் நடக்க போகிறது. எனவே தே.மு.தி.க.வினர் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். அப்படி அளந்து பேசவில்லை என்றால் அதற்குரிய பதிலடியை எங்கள் ஆட்களும் தருவார்கள்.

கடந்த தேர்தலில் தே.மு.தி.க.

கேள்வி:- பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகள் கிடைக்காததாலே தே.மு.தி.க. விலகியதா?

பதில்:- கட்சிகளின் பலத்தை பொறுத்தே தொகுதிகள் ஒதுக்கீடு நடந்தது. அடுத்த கட்சியை ஒப்பீட்டு தொகுதிகள் கேட்பதற்கு எந்த தார்மீக உரிமையும் தே.மு.தி.க.வுக்கு கிடையாது.

கேள்வி:- தே.மு.தி.க.வுக்கு வாக்குவங்கி இருக்கிறதா, இல்லையா?

பதில்:- தே.மு.தி.க. பலம், வாக்குவங்கி என்ன? என்பதை கடந்த தேர்தலின்போதே, அவர்கள் நிரூபித்துவிட்டார்கள்.

மேற்கண்டவாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Next Story