புதுச்சேரி தி.மு.க-காங்கிரஸ் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை


புதுச்சேரி தி.மு.க-காங்கிரஸ் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 March 2021 7:24 AM GMT (Updated: 10 March 2021 7:24 AM GMT)

புதுச்சேரி தி.மு.க-காங்கிரஸ் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

புதுச்சேரி,

தமிழக அரசியலை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்று தேர்தலை சந்திப்பது வழக்கம். இந்தநிலையில் தி.மு.க.வில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருந்தது. அவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 5-ந்தேதி நேர்காணலை நடத்தினார்.

அப்போது மு.க.ஸ்டாலினிடம், ‘தமிழ்நாட்டை போன்றே புதுச்சேரியிலும் தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும். நாம் 18 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். முதல்-அமைச்சர் வேட்பாளரும் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.’ என்று புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுகோளை முன்வைத்தனர்.

புதுச்சேரி மாநில தி.மு.க.வினரின் ஆலோசனைக்கு ஏற்ப, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை விட கூடுதல் இடங்களில் போட்டியிடும் வகையில் தி.மு.க. சார்பில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியிலும் தி.மு.க. தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு நிர்ப்பந்தம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு சுமுக உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி தி.மு.க-காங்கிரஸ் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த 2ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story