கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டியல் வெளியீடு: நிதி மந்திரி தாமஸ் ஐசக் உள்பட 5 மந்திரிகளுக்கு வாய்ப்பு இல்லை


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டியல் வெளியீடு: நிதி மந்திரி தாமஸ் ஐசக் உள்பட 5 மந்திரிகளுக்கு வாய்ப்பு இல்லை
x
தினத்தந்தி 11 March 2021 4:59 AM IST (Updated: 11 March 2021 4:59 AM IST)
t-max-icont-min-icon

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். நிதி மந்திரி தாமஸ் ஐசக் உள்பட 5 மந்திரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

திருவனந்தபுரம், 

தமிழகம், புதுச்சேரியுடன் அண்டை மாநிலமான கேரளமும் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில், ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்.) களம் காண்கிறது.

தர்மடம் தொகுதியில்

பினராயி விஜயன்

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் பட்டியல் திருவனந்தபுரத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 85 வேட்பாளர்களில் 83 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, முதல்-மந்திரி பினராயி விஜயன், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன், சுகாதார மந்திரி கே.கே.சைலஜா, தொழிலாளர் நலத்துறை மந்திரி டி.பி.ராமகிருஷ்ணன், மின்சாரத்துறை மந்திரி எம்.எம்.மானி, அறநிலைய மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், மீன்வளத்துறை மந்திரி மெர்சிகுட்டி அம்மா, உள்ளாட்சித்துறை மந்திரி ஏ.சி.மொய்தீன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

5 மந்திரிகளுக்கு வாய்ப்பு இல்லை

அதேநேரம், ஏற்கனவே இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்ற கட்சியின் முடிவால், நிதி மந்திரி டி.எம்.தாமஸ் ஐசக் உள்பட 5 மந்திரிகளுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

வேட்பாளர் பட்டியலில், 12 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியீட்டை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொறுப்புச் செயலாளர் ஏ.விஜயராகவன் கூறியதாவது:-

இந்த முறை, 12 பெண்கள் உள்பட நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 33 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. யாருக்கும் ‘சீட்’ மறுப்பது கட்சியின் நோக்கமல்ல, புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இம்முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது, இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த 13 வேட்பாளர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

42 பட்டதாரிகள்

வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் 4 பேர், 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். 42 பேர் பட்டதாரிகள், 22 பேர் வக்கீல்கள்.

கடந்த தேர்தலில் 92 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இம்முறை கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோருடன் 85 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களின் 7 இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், இடதுசாரி கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story