அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை முதல் மீண்டும் பிரசாரம்


அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை முதல் மீண்டும் பிரசாரம்
x
தினத்தந்தி 11 March 2021 7:52 AM GMT (Updated: 11 March 2021 7:52 AM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை (12-ந் தேதி) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையே அ.தி.மு.க. வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேற்று அறிவித்தார். 

இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை (12-ந் தேதி) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் வாழப்பாடிக்கு வருகிறார். பின்னர் முதல் கட்ட பிரசாரத்தை ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பஸ்நிலையத்தில் மாலை 5 மணி அளவில் சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு ஓட்டு கேட்டு பேசுகிறார்.

தொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு கெங்கவல்லி அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். பின்னர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை பகுதியில் மாலை 8 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் காரில் சேலம் வரும் அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார். மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் தொடர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி அவர் செல்லும் வழிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

சேலம் கிழக்கு மாவட்டத்தில் நாளை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்க வரும் தமிழக முதல்வருக்கு வழியெங்கிலும் பூரண கும்ப மரியாதை அளிக்கவும், மேலும் விழா மேடை, வேட்பாளர் வாக்கு சேகரிப்பு மேடை என அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் செய்து வருகிறார். முதல்கட்ட பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் தொடங்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Next Story