புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்


புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 12 March 2021 3:27 AM GMT (Updated: 12 March 2021 3:27 AM GMT)

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ந்தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வந்தன.

புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் களம் காணுகின்றன. இதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் இந்த கூட்டணிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இத்தகைய சூழலில் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

பொதுத்தொகுதிகளில் போட்டியிடுவோர் டெபாசிட்டாக ரு.10 ஆயிரமும், தனித்தொகுதிகளில் போட்டியிடுவோர் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய செல்வோர் 2 வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை தேர்தல்துறை செய்துள்ளது. மனுக்கள் பெறும் அலுவலகங்களில் 100 மீட்டர் தொலைவில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு பணிக்காக உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி), ஊசுடு (தனி) தொகுதிகளில் போட்டியிடுவோர் வில்லியனூர் சப்-கலெக்டர் முரளிதரனிடமும், மங்கலம், வில்லியனூர், உழவர்கரை தொகுதியில் போட்டியிடுவோர் நில அளவைத்துறை இயக்குனர் ரமேசிடமும், கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடியில் போட்டியிடுவோர் கூட்டுறவு பதிவாளர் முகமது மன்சூரிடமும், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுவோர் சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்‌ஷினியிடமும் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும்.

லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடுவோர் துணை கலெக்டர் கந்தசாமி அலுவலகத்திலும், உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவோர் தொழிலாளர் துறை துணை ஆணையர் மோகன்குமாரிடமும், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளி தொகுதியில் போட்டியிடுவோர் தொழில் வணிகத்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டியிடமும், ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம் (தனி), பாகூர் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் போக்குவரத்து துணை ஆணையர் சத்தியமூர்த்தியிடமும் வேட்பு மனுதாக்கல் செய்யவேண்டும்.

நெடுங்காடு (தனி), திருநள்ளாறு தொகுதிகளில் போட்டியிடுவோர் குடிமைப்பொருள் வழங்கல்துறை துணை இயக்குனர் சுபாசிடமும், காரைக்கால்-வடக்கு, காரைக்கால்-தெற்கு, நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிடுவோர் துணை கலெக்டர் ஆதர்சிடமும், மாகி தொகுதியில் போட்டியிடுவோர் மண்ட நிர்வாகி சிவராஜ் மீனாவிடமும், ஏனாம் தொகுதியில் போட்டியிடுவோர் மண்டல நிர்வாகி அமான் சர்மாவிடமும் மனு தாக்கல் செய்யவேண்டும்.

Next Story