"அமமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும்" - டிடிவி தினகரன்
அமமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்யும் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் எந்த நேரத்திலும் வெளியிட தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தநிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கட்சிகளுடனே இந்த சட்டமன்ற தேர்தலிலும் பயணிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தே.மு.தி.க. கடந்த 2 தினங்களுக்கு முன் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை திடீரென்று வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து தே.மு.தி.க. இந்த தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகிறார்கள்? புதிய கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுமா? அல்லது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்குமா? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமமுக - தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அமமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும் என்றும் அமமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story