கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்


கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 12 March 2021 9:15 AM GMT (Updated: 12 March 2021 9:15 AM GMT)

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். 
இதற்கிடையே தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும், அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், திருவிக நகர் தொகுதியில் கரு.பழனியப்பன் போட்டியிடுகிறார். மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ’கொங்கு ஊழல் கோட்டையாக உள்ளது சோகம் அளிக்கிறது; அதனால் தான் அங்கு போட்டியிடுகிறேன்’ என்றார்.

Next Story