’மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன்’ - கமல்ஹாசன் டுவீட்


’மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன்’ - கமல்ஹாசன் டுவீட்
x
தினத்தந்தி 12 March 2021 9:55 AM GMT (Updated: 12 March 2021 9:55 AM GMT)

மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்குவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இதில் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் இடம்பெற்றுள்ளது. அதுதவிர கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் மநீக சார்பில் சுபா சார்லஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரீஹரன் பாலா வில்லிவாக்கம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சந்தோஷ்பாபு வேளச்சேரி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். கட்சி தொடங்கியபின் கமல்ஹாசன் போட்டியிடும் முதல் தேர்தல் இதுவாகும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மநீம போட்டியிட்டபோது அக்கட்சியின் சார்பில் போட்டியிடுவோர் பட்டியலில் கமல்ஹாசன் இடம்பெறாமல் இருந்தது. 

இந்நிலையில், கட்சி தொடங்கிய பின்னர் முதல்முறையாக கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்’ என தெரிவித்துள்ளார்.

Next Story