விருகம்பாக்கம்: திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு கார் மீது கல்வீச்சு
விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர்கள், அண்ணா அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை
விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளரும் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகனுமான பிரபாகர் ராஜா வாக்கு சேகரிக்கச் சென்ற போது சககட்சி நிர்வாகியின் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜா கார் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று திமுக சார்பில் 173 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து இன்று பிரபாகர் ராஜா வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அவர் விருகம்பாக்கம் திமுக நிர்வாகி தனசேகரின் வீட்டிற்கு அவர் வாக்கு சேகரிக்க சென்றதாகத் தெரிகிறது. அப்போது அங்கிருந்த தனசேகர் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜா காரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கே.கே. நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர்கள், அண்ணா அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், தோல்வியை தழுவினார். இந்நிலையில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனசேகரன் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் சுமார் 80 சதவீதம் பேர் தங்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story