பாஜக வேட்பாளர் பட்டியல் - இன்று மதியம் 2.30 மணிக்கு வெளியாக வாய்ப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று மதியம் 2.30 மணிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலுடன் தமிழக பாஜகவினர் அடங்கிய குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சி தலைமையிடமான டெல்லி சென்றிருந்தது. அங்கு பாஜக தேசிய தலைவரிடம் தமிழக தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர் அடங்கிய பட்டியலை வழங்கியது.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு பட்டியலும் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story