தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முன்னுரிமை


தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முன்னுரிமை
x
தினத்தந்தி 15 March 2021 2:47 AM IST (Updated: 15 March 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முன்னுரிமை.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் குளச்சல், விளவங்கோடு, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகள் தவிர 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்த 21 வேட்பாளர் பட்டியலில், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் 3 பேர்களின் மகன்கள் இடம் பெற்று உள்ளனர். அதாவது, ஈரோடு (கிழக்கு) தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிடுகிறார். அறந்தாங்கி தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இதே போன்று, திருவாடனை தொகுதியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் ஆர்.எம்.கருமாணிக்கம் போட்டியிடுகிறார்.

மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மறைந்த காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமாரின் மகன் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் பட்டியலில் 4 காங்கிரஸ் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் பெயர் வெளியாகி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story