தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் ரகளை


தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் ரகளை
x
தினத்தந்தி 14 March 2021 10:01 PM GMT (Updated: 14 March 2021 10:01 PM GMT)

புதுச்சேரியில் தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வாக்குவாதம் செய்து நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு,, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.

இந்த முறை கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே தி.மு.க. போர்க்கொடி தூக்கியது.

காங்கிரசார் ஆதங்கம்

இதையடுத்து புதுவை காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் சென்னை சென்று தங்களது கட்சி தலைமையுடன் பேசி காங்கிரஸ் கட்சிக்கு 15, தி.மு.க.வுக்கு 13 தொகுதிகள், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு இடம் என உடன்பாடு செய்து கொண்டனர்.

ஆனால் இது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிக இடங்களை கொடுத்ததுடன் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக அவர்கள் ஆதங்கமடைந்தனர்.

ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓரிரு நாளில் பட்டியலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையொட்டி காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு கோஷம்

கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் குறைவான தொகுதியில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதை கண்டித்தும் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது மங்கலம் தொகுதி காங்கிரஸ் நிர்வாகி ரகுபதி மங்கலம் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌‌ஷமிட்டார். இதேபோல் திருபுவனை தொகுதி வெங்கடேசன் தனது பையில் வைத்திருந்த தி.மு.க. கொடியை எடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோருக்கு போர்த்த முயன்றார். இதுகுறித்து அவரை அங்கிருந்த நிர்வாகிகள் எச்சரித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் அங்கு இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மண்ணாடிப்பட்டு பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த 4 சட்டமன்ற தேர்தல்களில் மண்ணாடிப்பட்டு தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு தான் ஒதுக்கப்படுகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கு தேர்தலில் நிற்கும் வாய்ப்பே இல்லாமல் போகிறது எனறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேட்பாளர்கள் ஆய்வுக்கு வந்த தலைவர்களை முற்றுகையிட்டனர். அவர்களை நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கூட்டம் ஒத்திவைப்பு

இதனால் வேட்பாளர் தேர்வு குறித்து கருத்து கேட்க முடியாத நிலை ஏற்பட்டதால் 30 நிமிடத்துக்குள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே பல்வேறு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களும் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க துணை ராணுவ படையினர், உள்ளூர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வேட்பாளர் ஆய்வு குழு தலைவர்கள் கட்சி தொண்டர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் காங்கிரஸ் அலுவலகத்தில் கூச்சல், குழப்பமாக இருந்தது.

இதனால் கருத்து கேட்பு கூட்டத்தை நிறுத்தி விட்டு ஒவ்வொரு தொகுதியின் நிர்வாகிகளையும், முக்கிய பிரமுகர்களையும் தனித்தனியாக அழைத்து கருத்து கேட்கப்பட்டது.

Next Story