தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனுதாக்கல் இன்று கடைசி நாள் இதுவரை 3,293 வேட்புமனுக்கள் தாக்கல்


தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனுதாக்கல் இன்று கடைசி நாள் இதுவரை 3,293 வேட்புமனுக்கள் தாக்கல்
x
தினத்தந்தி 19 March 2021 5:52 AM IST (Updated: 19 March 2021 5:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 13-ந்தேதி (சனிக்கிழமை), 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் தவிர்த்து, வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முகூர்த்த நாளான கடந்த 15-ந்தேதி அன்று, முதல்-அமைச்சர் வேட்பாளர்களாக களத்தில் உள்ள அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் (கோவில்பட்டி), மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் (கோவை தெற்கு), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (திருவொற்றியூர்) ஆகிய 5 பேரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அடுத்தடுத்த நாட்களில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவை அளித்தனர்.

நடிகை குஷ்பு

இந்தநிலையில் 5-வது நாளாக நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் சென்னை சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நடிகை குஷ்பு, திரு.வி.க.நகர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் த.மா.கா. வேட்பாளர் பி.எல்.கல்யாணி, தி.மு.க. வேட்பாளர் தாயகம் கவி, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, அண்ணாநகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ், விருகம்பாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர் பி.காளிதாஸ் (அ.ம.மு.க.), எழும்பூர்-தனி தொகுதியில் டி.பிரபு (தே.மு.தி.க.), பெரம்பூர் தொகுதியில் பொன்னுசாமி (ம.நீ.ம.) திரு.வி.க.நகர்- தனி தொகுதியில் டாக்டர் ஆர்.இளவஞ்சி (நாம் தமிழர்), ராயபுரம் தொகுதியில் எஸ்.கமலி (நாம் தமிழர்), எம்.ஜேம்ஸ் மார்டின் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) விருகம்பாக்கம் தொகுதியில் பி.பார்த்தசாரதி (தே.மு.தி.க.), சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் ராஜேந்திரன் (அ.ம.மு.க.), மயிலாப்பூர் தொகுதியில் கே.எம்.ஷெரீப் (ம.நீ.ம.), சி.ரகு (பகுஜன் சமாஜ்) ஆகிய வேட்பாளர்களும், சுயேச்சைகளும் நேற்று வேட்புமனுவை அளித்தனர்.

இதுவரையில்3,293 வேட்புமனுக்கள்

தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 3 ஆயிரத்து 293 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 721 மனுக்களும், பெண்கள் 571 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில் மட்டும் திருநங்கை ஒருவர் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 51 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல் ஆகிய 2 தொகுதிகளில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கலாகி உள்ளன.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி மகுடம் சூடிய ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 30 மனுக்களும், எழும்பூர்-தனி தொகுதியில் குறைந்தபட்சமாக 7 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மனுக்கள் மீது நாளை பரிசீலனை

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது. எனவே மதியம் 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு வரும் வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 3 மணியை கடந்து ஒரு நிமிடம் காலதாமதமாக வந்தாலும், அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு ஆகும். எனவே தாமதமாக வரும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்பது கவனத்துக்குரியது.

வேட்புமனுக்கள் இன்று நிறைவு பெற்றவுடன், அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படும்.

சின்னம் பொருத்தும் பணி

வேட்புமனு ஏற்கப்பட்டு, கடைசிநேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று எண்ணும் வேட்பாளர்கள் தங்களது மனுவை வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

எனவே இந்த கால அவகாசம் முடிவடைந்தவுடன், அன்றைய தினம் மாலையிலேயே அந்தந்த தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயார் செய்யப்படும்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் அன்றைய தினமே நடைபெறும். அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி முழுவீச்சில் தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story