தொகுதி கண்ணோட்டம்: ஆற்காடு


தொகுதி கண்ணோட்டம்: ஆற்காடு
x
தினத்தந்தி 19 March 2021 11:01 AM GMT (Updated: 19 March 2021 11:01 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் ஆற்காடு ஆகும்.

சரித்திர சிறப்பு அம்சங்கள்
நவாப்களின் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. வாணிபத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆங்கிலேயப் படை தளபதி ராபர்ட் கிளைவ் இந்தியாவில் முதன்முதலில் கைப்பற்றிய பகுதி ஆற்காடு ஆகும். ஆற்காடு நகரை சுற்றியுள்ள பச்சைக்கல் மசூதி, ராஜா ராணி குளங்கள், சோழர் காலத்தில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவை ஆற்காடு நகரின் பழமையை எடுத்து காட்டுபவையாக உள்ளன. ஆற்காட்டின் பிரதான சின்னமாக டெல்லிகேட் விளங்கி வருகிறது. டெல்லியில் ஆட்சியை பிடிப்பதற்கு அடையாள மாக இந்த டெல்லி கேட்டை வெள்ளைக்காரர்கள் அமைத்தார்கள் என்று கூறுகின்றனர்.

ஆர்க் எனப்படும் அத்தி மரங்கள் நிறைந்து காணப்பட்ட தால் ஆற்காடு என பெயர் வந்ததாகவும், ஆற்காட்டை சுற்றி ஆறு காடுகள் இருந்ததால் ஆற்காடு என பெயர் வந்ததாகவும் கூறப் படுகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் முன்பு ஆற்காடும் அடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரித்திர ரீதியாகவும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றது ஆற்காடு சட்டமன்ற தொகுதி.

கிச்சிலி சம்பா அரிசி
ஆற்காடு பிரியாணியும், புகழ்பெற்ற இனிப்பு வகையான மக்கன் பேடாவும் சிறப்பு பெற்றது. ஆற்காடு கிச்சிலி சம்பா அரிசி ஆற்காடு தொகுதிக்கு பெருமை சேர்க்கிறது.கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் தொடங்கி ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழகத்தில் அதிக தூரம் பாய்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலில் கலக்கும் பாலாற்றில் ஆற்காடு அருகே புதுப்பாடியில் அணை கட்டப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் அணை இதுவாகும்.ஆற்காடு தொகுதியில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மேலும் சில பகுதிகளில் நெசவுத்தொழிலும், பீடி சுற்றும் தொழிலும் உள்ளன. இங்கு விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

ஆற்காடு சட்டமன்ற தொகுதி யில் ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகளும், விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன. மேலும் ஆற்காடு ஒன்றியத்தில் 25 ஊராட்சிகளும், திமிரி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், கணியம்பாடி ஒன்றியத்தில் அடுக்கம்பாறை, கணியம்பாடி, மூஞ்சூர்பட்டு, துத்திப்பட்டு, சாத்துமதுரை, நெல்வாய், கனிகனியான், வேப்பம்பட்டு, பாலாத்துவண்ணான், நஞ்சுகொண்டாபுரம், கத்தாழம்பட்டு, வல்லம், கீழ்பள்ளிப்பட்டு, மேட்டுபாளையம், கம்மசமுத்திரம், மோத்தக்கல், கம்மவான்பேட்டை, சலமநத்தம் ஆகிய 18 ஊராட்சிகளும், வேலூர் ஒன்றியத்தில் பாலமதி ஊராட்சியும், வேலூர் மாநகராட்சி பகுதியில் இடையன்சாத்தும் அடங்கியுள்ளன. பெரும்பாலும் கிராம பகுதிகள் நிறைந்துள்ள தொகுதி ஆற்காடு தொகுதி ஆகும். இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், முதலியார், யாதவர்கள், நாயுடு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர்.

368 வாக்குச்சாவடிகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மொத்தம் 368 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆற்காடு தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பா.ம.க. ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. 

முன்னாள் அமைச்சர்களான ஆற்காடு நா.வீராசாமி, ஜி.விசுவநாதன் ஆகியோர் ஆற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.1952-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் எஸ்.பஞ்சாட்சரம் செட்டியார், காமன்வீல் கட்சி சார்பில் நாகரத்தினம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பஞ்சாட்சரம் செட்டியார் வெற்றி பெற்றார். 1957-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.காதர்ஷெரீப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட லட்சுமணன் தோல்வி அடைந்தார். 1962-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் முனிரத்தின செட்டியாரும், காங்கிரஸ் சார்பில் காதர் ஷெரீப்பும் போட்டியிட்டதில் முனிரத்தினசெட்டியார் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2 முறை வெற்றி
1967 மற்றும் 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆற்காடு நா.வீராசாமி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து 1967-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரங்கநாத நாயக்கரும், 1971-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எத்திராஜுலு நாயுடுவும் தோல்வி அடைந்தனர்.1977, 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஜெ.உய்யகொண்டான், ஏ.எம்.சேதுராமன், த.பழனி ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள். 1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் டி.ஆர்.கஜபதியும், அ.தி.மு.க. ஜெயலலிதா அணி சார்பில் கே.வி.ராமதாசும் போட்டியிட்டனர். இதில் கஜபதி வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஜி.விசுவநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.கஜபதி தோல்வி அடைந்தார்.1996-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.என். சுப்பிரமணியனும், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ப.நீலகண்டனும், 2006-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் போட்டியிட்ட கே.எல்.இளவழகனும் வெற்றி பெற்றனர்.கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.கே.ஆர்.சீனிவாசனும், தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் கே.எல்.இளவழகனும் போட்டியிட்டனர். இதில் வி.கே.ஆர்.சீனிவாசன் வெற்றி பெற்றார்.2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.வி.ராமதாஸ் தோல்வி அடைந்தார்.

மேம்பாலம் அமைக்க வேண்டும்
ஆற்காடு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆற்காடு அருகே காவனூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலில் இருந்து தவிர்க்க ஆற்காடு நகரத்தில் இருந்து ஆரணிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

ஆற்காடு தொகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ. அமைக்க வேண்டும். ஆற்காடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தி.மு.க.- பா.ம.க. மோதல்
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆற்காடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பனும், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகனும் போட்டியிடுகின்றனர். ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கடந்த தேர்தலில் ஆற்காடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் கதிரவன் போட்டியிடுகிறார்.

வெற்றியும், தோல்வியும்

ஆற்காடு சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-

1952 - காங்கிரஸ் வெற்றி:-

எஸ்.பஞ்சாட்சரம் செட்டியார் (காங்.) - 13,613

நாகரத்தினம் (காமன்வீல் கட்சி) - 11,635

1957 - காங்கிரஸ் வெற்றி:-

எஸ்.காதர்ஷெரீப் (காங்.) - 20,643

லட்சுமணன் (தி.மு.க.) - 11,807

1962 - தி.மு.க. வெற்றி:-

முனிரத்தின செட்டியார்(தி.மு.க.) -28,485

எஸ்.காதர்ஷெரீப் (காங்.) - 19,705

1967 - தி.மு.க. வெற்றி :-

ஆற்காடு நா.வீராசாமி (தி.மு.க.) -37,514

ஏ.ஜி.ரங்கநாதநாயக்கர் (காங்.) - 23,184

1971- தி.மு.க. வெற்றி :-

ஆற்காடு நா.வீராசாமி (தி.மு.க.) -39.126

எத்திராஜுலுநாயுடு (காங்.) -25,061

1977 - அ.தி.மு.க. வெற்றி :-

கே.ஜெ.உய்யகொண்டான்(அ.தி.மு.க.) - 27,193

எத்திராஜுலுநாயுடு (ஜனதா) -16,614

1980 - அ.தி.மு.க. வெற்றி:-

ஏ.எம்.சேதுராமன் (அ.தி.மு.க.) - 35,998

அக்பர்பாஷா (காங்.) -34,058

1984 - அ.தி.மு.க. வெற்றி:-

த.பழனி (அ.தி.மு.க.) -52,222

ஆற்காடு நா.வீராசாமி (தி.மு.க.) -34,509

1989 - தி.மு.க. வெற்றி:-

டி.ஆர்.கஜபதி (தி.மு.க.) -34,775

கே.வி.ராமதாஸ் (அ.தி.மு.க.-ஜெ) -20,470

1991 - அ.தி.மு.க. வெற்றி :-

ஜி.விசுவநாதன் (அ.தி.மு.க.) - 61,712

டி.ஆர்.கஜபதி (தி.மு.க.) - 27,439

1996 - தி.மு.க. வெற்றி :-

பி.என்.சுப்பிரமணியன் (தி.மு.க.) -62,974

கே.வி.ராமதாஸ் (அ.தி.மு.க.) - 36,567

2001 - அ.தி.மு.க. வெற்றி :-

ப.நீலகண்டன் (அ.தி.மு.க.) - 61,474

ஏ.கே.சுந்தரமூர்த்தி (தி.மு.க.) - 43,764

2006 - பா.ம.க. வெற்றி :-

கே.எல்.இளவழகன் (பா.ம.க.) - 60,286

வி.ஆர்.சந்திரன் (அ.தி.மு.க.) - 48,969

2011 - அ.தி.மு.க. வெற்றி :-

வி.கே.ஆர்.சீனிவாசன் (அ.தி.மு.க.) - 93,258

கே.எல்.இளவழகன் (பா.ம.க.)- 74,005

2016 - தி.மு.க. வெற்றி :-

ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (தி.மு.க.) -84,182

கே.வி.ராமதாஸ் (அ.தி.மு.க.)- 73,091

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் 2,67,796

ஆண்கள் 1,26,652

பெண்கள் 1,33,475

மூன்றாவது பாலினம் 8

Next Story