10 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கோரப்பசியில் இருக்கிறார்கள்... வந்தால் சும்மா இருப்பார்களா? முதல்வர் பழனிசாமி


10 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கோரப்பசியில் இருக்கிறார்கள்... வந்தால் சும்மா இருப்பார்களா?  முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 March 2021 9:32 AM GMT (Updated: 20 March 2021 9:32 AM GMT)

10 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கோரப்பசியில் இருக்கிறார்கள். அவர்கள் வந்தால் சும்மா இருப்பார்களா? என கள்ளக்குறிச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்த வேனில்  தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

அ.தி.மு.க. கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக்கூட்டணி. ஆனால் தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. வெற்றிக்கூட்டணிக்கு வாக்களித்து கள்ளக்குறிச்சி தொகுதியை இன்னும் மேன்மை அடையச்செய்ய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இன்றைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செல்கிற பிரசார கூட்டங்களில் எல்லாம், வேண்டுமென்றே, திட்டமிட்டு அ.தி.மு.க. அரசை பற்றியும், கூட்டணி கட்சித் தலைவர்களை பற்றியும் அவதூறு செய்தி பரப்பி வருகிறார்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் நடைபெறுகிற அரசு. எம்.ஜி.ஆர்., ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்கள் ஏற்றம் பெறவும் பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். அதுபோல் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். கண்ட வழியில் நின்று ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்கள் ஏற்றம் பெறவும் பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்காக வழங்கியுள்ளார்.

இன்றைக்கு ஸ்டாலின் வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசி வருகிறார். நான் விவசாயி இல்லையாம், போலி விவசாயி என்கிறார். விவசாயிகளை போலி விவசாயி என்று கண்டறிந்தவர் ஸ்டாலின். விவசாயத்தைப்பற்றி தெரியாமலேயே அவர் பேசுகிறார். விவசாயத்தில் என்ன போலி விவசாயி? நான் நிலம் வைத்துள்ளேன், எனது தாத்தா காலத்தில் இருந்து காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறேன். ஸ்டாலினுக்கு ஆராய்ச்சியாளர் பட்டம்தான் கொடுக்க வேண்டும். அவர் கேலி கிண்டல் பேசி விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகிறார், என்னைப்பற்றி அல்ல.

திட்டமிட்டு விவசாய பணியை கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின். உள்ளாட்சித் துறையில் எதையுமே செய்யவில்லை என்கிறார் அவர். உள்ளாட்சித்துறை அமைச்சராக நீங்களும் தான் இருந்தீர்கள், நீங்கள் ஒன்றுமே செய்யவில்லையே. பதவி கிடைத்ததும் அதை சுகமாக அனுபவித்தீர்களே தவிர நாட்டு மக்களைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் எங்கள் ஆட்சியில் உள்ளாட்சித்துறை 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இந்திய அளவிலேயே அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் உள்ளாட்சித்துறையில் அதிக விருது பெற்றுள்ளது.

நீங்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும் இருந்தீர்களே, எவ்வளவு விருது பெற்றீர்கள். பள்ளிக்கூடங்களில் வைக்கும் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் உயர்ந்த நிலைக்கு வரமுடியும், மேற்படிப்பு படிக்க முடியும். அதுபோல்தான் இந்திய அளவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் தேர்ச்சி பெற்று விருது பெற்றுள்ளார். சிறப்பாக, திறமையாக செயல்பட்டால்தான் இதுபோன்ற விருதுகள் பெற முடியும். உங்களுக்கு அந்த தகுதி இல்லை, திறமை இல்லாத தலைவர்தான் ஸ்டாலின். அதனால்தான் அவர் திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பச்சை பொய்யை பேசி வருகிறார்.

இன்றைக்கு நாங்கள் நெடுஞ்சாலைத்துறையில் எந்தளவிற்கு சிறப்பான சாலைகளை போட்டுள்ளோம் என்பது உங்களுக்கே தெரியும். எங்கு சென்றாலும் சிறப்பான சாலைகளாக இருக்கிறது.ஆனால் அவர்களது வாயில் வருவது எல்லாம் பொய், ஊழல். கருணாநிதி என்றைக்கு முதல்-அமைச்சராக ஆனாரோ அன்றைக்கே ஊழல் பெருகிவிட்டது. அதை அவர்களால் மறக்க முடியவில்லை, பழக்கதோஷம் அவர்களை விடவில்லை, அதனால்தான் திருப்பி திருப்பி அதையே பேசிக்கொண்டு வருகிறார்கள்.

எங்கள் ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆரம்பித்தோமோ இல்லையா, புதிய மாவட்டத்திற்கான வளர்ச்சி பணிகளை ஆரம்பிக்கும்போது ஸ்டாலின் தூண்டிவிட்டு அந்த பணிக்கு தடை போட்டார். அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பணிகள் நடந்து வருகிறது. அதுபோல் புதிய மாவட்டம் அறிவித்தபிறகு குறுகிய காலத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாங்கள் கொடுத்துள்ளோம். 

அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. வேண்டுமென்றால் இங்கு வந்து நேரில் பாருங்கள். அதுபோல் கள்ளக்குறிச்சி- சேலம் மாவட்ட எல்லையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான கால்நடை பூங்காவை அமைத்துள்ளோம். நான், பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு சரி, அதை முழுமையாக செயல்படுத்துவது இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று நானே அறிவித்தேன், அதற்கு நானே அடிக்கல் நாட்டி வைத்து அதை நானே திறந்தும் வைத்துள்ளேன்.

இன்றைக்கு மக்களை குழப்பி எப்படியாவது வெற்றி பெற வேண்டும், அதற்கு என்னென்ன வழிகள் என்று தப்பான வழிகளையெல்லாம் கண்டுபிடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்க துடிக்கிறார், நல்லது செய்தால்தானே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், நல்லது செய்யும் எண்ணம் அவர்களுக்கு வராது. இன்னும் ஆட்சி அதிகாரமே அவர்களிடம் வரவில்லை, ஆனால் அவர்கள் காவல்துறையை மிரட்டுகின்றனர். எந்த அரசு வந்தாலும் அதிகாரிகளிடம் சுமூகமாக பேசினால்தான் பணிகள் சிறப்பாக நடைபெறும். அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதிகாரம் வரும் முன்பே அதிகாரிகளை மிரட்டுகின்றனர், அதிகாரம் வந்தால் என்னவாகும் என்று அரசு அதிகாரிகள் நினைத்துப்பாருங்கள்.

உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகிறது, அவர் தேர்தல் அறிக்கை வெளியிடுவது மட்டுமல்லாமல் டி.ஜி.பி.யை எச்சரிக்கிறார். இதுபோல் அ.தி.மு.க.வில் இருக்கிறதா? முதல்-அமைச்சருக்கு உரிய மரியாதையை அதிகாரிகளுக்கும் நாங்கள் கொடுக்கிறோம். அதிகாரிகள் மூலம்தான் அரசின் திட்டங்கள் மக்களை நேரில் சென்றடையும். எனவே அதிகாரிகளை தட்டிக்கொடுத்து அன்பாக பேசினால் தான் பணிகள் சிறப்பாக நடக்கும்.

தி.மு.க. என்பது ரவுடி கட்சி, அராஜக கட்சி. அந்த கட்சியின் தலைவரே அப்படித்தான் நடந்து கொள்கிறார். தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியில் தான் இருப்பார்கள். ஆத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க.வினர் கூட்டமாக சென்றதால் அங்கிருந்த போலீஸ் அதிகாரி, அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள், அந்த போலீஸ் அதிகாரியை பிடித்து கீழே தள்ளினர். இதனால் அந்த போலீஸ் அதிகாரி சாலையில் படுத்து போராட்டம் நடத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் ஏழை மக்களின் நிலைமை என்னவாகும்? இந்த நாடு தாங்குமா?

தி.மு.க.வில் இருக்கிறவர்கள் எல்லாம் குண்டு, குண்டாக இருக்கிறார்கள். ஓட்டல்களுக்கு சென்று பிரியாணி, புரோட்டா சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கும் பழக்கமே கிடையாது. ஓட்டல் உரிமையாளர்கள் பணம் கேட்டால் அவர்களை மிரட்டுவார்கள். இதற்கு அந்த கட்சியின் தலைவர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். தப்பு செய்தவர்களை கண்டித்தால் உண்மையான தலைவர், கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டுக்கு தேவையா? அ.தி.மு.க.வில் இதுபோன்று எங்கேயாவது நடந்தது உண்டா? அ.தி.மு.க. சட்டத்திற்கு உட்பட்ட கட்சி.

10 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கோரப்பசியில் இருக்கிறார்கள். அவர்கள் வந்தால் சும்மா இருப்பார்களா? தப்பி தவறி அவர்களுக்கு ஓட்டுப்போட்டால் கடை, கடையாக வந்து வசூல் செய்வார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. எங்கேயும் சாதி சண்டை கிடையாது, மத சண்டை கிடையாது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. நாமெல்லாம் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். அமைதியாக இருக்கும் மாநிலம் மேலும் வளர்ச்சியடைய அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள், நிச்சயமாக தி.மு.க.ஆட்சிக்கு வராது. இருந்தாலும் உஷாராக இருங்கள் என அவர் கூறினார்.

Next Story