நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 March 2021 7:34 AM GMT (Updated: 2021-03-21T13:04:12+05:30)

விருதுநகரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர், 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், அந்த பொதுக்கூட்டம் தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் கூடுதல் நேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனால், தேர்தல் நடத்தை விதிகளை நேற்று இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் சேர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story