திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு காலி பணியிடங்களுக்கு தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு - திமுக எம்.பி.கனிமொழி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் காலியாக உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்படும் என்றும் அதில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தாராபுரம்,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக எம்.பி. கனிமொழி திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளை யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தேர்வு எழுதி வேலை வாங்கி செல்லலாம் என சட்டத்தை மாற்றி வைத்துள்ளனர்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 3,50,000 அரசு காலி பணியிடங்கள் கண்டிப்பாக நிரப்பப்படும். அதிலும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் கொண்டு வரப்படும். தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டு நிச்சயமாக லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story