"அதிமுக - பாஜக கூட்டணி வலிமையானது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அதிமுக - பாஜக கூட்டணி வலிமையானது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 22 March 2021 6:26 AM GMT (Updated: 22 March 2021 6:26 AM GMT)

அதிமுக - பாஜக கூட்டணி வலிமையானது என தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஓசூர்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பிற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஓசூரில் தொழில், வேலைவாய்ப்பு பெருகிட, பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி’ என்றார்.

ஓசூர் தொகுதியில் திமுக வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story