புதுச்சேரியில் பாமக போட்டியிடவில்லை... 10 தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் திடீர் வாபஸ்
புதுச்சேரியில் போட்டியிட பாமக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை இன்று திடீரென வாபஸ் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி,
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அக்கூட்டணியில் பாஜகவுக்கு 9 தொகுதிகளும் அதிமுகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டின்போது உடன்பாடு எட்டப்படாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகியது. மேலும், புதுச்சேரி தேர்தலில் பாமக 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதற்காக, 10 வேட்பாளர்களை பாமக அறிவித்தது. இதையடுத்து, அந்த 10 பாமக வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான இன்று பாமக வேட்பாளர்கள் 10 பேரும் தாங்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை திடீரென வாபஸ் செய்தனர். கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என பாஜக உத்திரவாதம் அளித்ததால் 10 தொகுதிகளில் இருந்து பாமக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதாக புதுச்சேரி பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
பாஜக வழங்கிய உத்தரவாதத்தை அடுத்து பாமக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதாக தன்ராஜ் தெரிவித்துள்ளார். தனித்துபோட்டியிடுவதாக அறிவித்த பாமக திடீரென தனது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story