"கொரோனா காலத்தில் 7.5 கிலோ எடை குறைந்தேன்" - அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்
கொரோனா காலத்தில் 24 மணி நேரமும் பணியாற்றியதால் எனது உடல் எடை 7.5 கிலோ வரை குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாக தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு உட்பட்ட இலூப்பூர் பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இயேசு நாதர் சிலுவையை சுமந்தது போல் விராலிமலை தொகுதியை சுமந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக விராலிமலை தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளேன்.
கொரோனா காலத்தில் 24 மணி நேரமும் பணியாற்றியதால் எனது உடல் எடை 7.5 கிலோ வரை குறைந்துள்ளது. எனக்கும் உடலில் குறைபாடு உள்ளது இருந்தாலும் தான் எடுத்துகொண்ட பொறுப்பை சரியாக செய்யவேண்டும் என்ற வெறி மனதில் உள்ளது.
எனக்கு 24 மணி நேரமும் உழைக்க தெரியும், கஷ்டபட தெரியும், நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்க்க தெரியும். எனது கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை இந்த தொகுதிக்கு உழைத்துக்கொண்டே இருப்பேன். 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story