கொரோனா என்றால் மருந்து, மாத்திரையாக வருவேன்; கஜா புயல் என்றால் மின்சாரம், தண்ணீராக வருவேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்


கொரோனா என்றால் மருந்து, மாத்திரையாக வருவேன்; கஜா புயல் என்றால் மின்சாரம், தண்ணீராக வருவேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 24 March 2021 3:57 PM IST (Updated: 24 March 2021 3:57 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா என்றால் மருந்து, மாத்திரையாக வருவேன், கஜா புயல் என்றால் மின்சாரம், தண்ணீராக வருவேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விராலிமலை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

இதற்கிடையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து, தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், விராலிமலை தொகுதிக்கு உள்பட்ட கவரப்பட்டி பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கும்மியடித்து, தெம்மாங்கு பாட்டு பாடி அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்றனர். 

பின்னர் பிரசார நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா என்றால் மருந்து, மாத்திரையாக வருவேன், கஜா புயல் என்றால் மின்சாரம், தண்ணீராக வருவேன். பொங்கல் என்றால் சீராக வருவேன், சிறப்பாக வருவேன். எப்போதும் உங்களுடன் இருப்பேன்.. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நான் கவரப்பட்டிக்கு உழைத்துக்கொண்டே இருப்பேன். அதேபோல், கடைசி சொட்டு ரத்த்தம் உள்ளவரை விராலிமலை தொகுதிக்கு உழைத்துக்கொண்டே இருப்பேன்’ என்றார்.

Next Story