"இந்துக்களுக்கு எதிராக உள்ளது போல் சித்தரித்து திமுக மீது பொய் பிரசாரம்” - ஸ்டாலின் பேச்சு
இந்துக்களுக்கு எதிராக உள்ளது போல் சித்தரித்து திமுக மீது பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரசாரத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் பேசியதாவது,
அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாப்பதே திமுகவின் கடமை. இந்துக்களுக்கு எதிராக உள்ளது போல் சித்தரித்து திமுக மீது பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. திமுக எந்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.
பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசும், மாநிலத்தில் இருக்கக்கூடிய அதிமுக அரசும் தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது அவர்கள் திமுகவை விமர்சித்துதான் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனறே தவிர அவர்கள் ஆட்சி காலத்தில் (அதிமுக, பாஜக) கொண்டுவந்த திட்டங்கள், மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து கூற அவர்களுக்கு எதுவும் இல்லை’ என்றார்.
Related Tags :
Next Story