அரசியல் தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது - கனிமொழி டுவீட்


அரசியல் தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது - கனிமொழி டுவீட்
x
தினத்தந்தி 26 March 2021 5:37 PM IST (Updated: 26 March 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினர் மாற்றுக்கட்சியினர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமர்சனங்களின் போது தனிநபர் விமர்சனமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

கனிமொழி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்" என தெரிவித்துள்ளார்.



Next Story