பாட்டுப்பாடி பிரசாரம் செய்த நடிகர் கார்த்திக்
தேனி மாவட்டம் போடி தொகுதியில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக நடிகர் கார்த்திக் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.
தேனி:
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து மனித உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான கார்த்திக் போடி சட்டமன்ற தொகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
கோடாங்கிபட்டி, விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், போடி நகர் ஆகிய இடங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கோடாங்கிபட்டியில் நடிகர் கார்த்திக் பேசும்போது, "3 நாட்களுக்கு முன்பு தான் நான் மருத்துவமனையில் இருந்து வந்தேன். டாக்டர்கள் அறிவுரையையும் மீறி மக்களை பார்த்தே ஆக வேண்டும் என்று வந்துள்ளேன்.
மக்களின் அன்பை விட பெரிய டானிக் எனக்கு கிடைக்காது. நான் பெரிதும் மதிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை இணை முதல்-அமைச்சர் என்று தான் சொல்வேன்.
துணை முதல்-அமைச்சர் என்று கூட சொல்லமாட்டேன். இங்கு எழும் கரகோஷம் எல்லா இடங்களிலும் ஒலிக்கவேண்டும்.
இரட்டை இலையில் வாக்குகள் குவிய வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்திற்கு நல்ல உதாரணமாக ஒரு பாட்டு இருக்கிறது" என்று கூறியதுடன், "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.
அதைக்கேட்டு மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
Related Tags :
Next Story