என்னை வெற்றி பெற செய்தால் 'சட்டமன்றத்தில் உங்கள் குரலாய் ஒலிப்பேன்' நடிகை ஸ்ரீபிரியா பிரசாரம்


என்னை வெற்றி பெற செய்தால் சட்டமன்றத்தில் உங்கள் குரலாய் ஒலிப்பேன் நடிகை ஸ்ரீபிரியா பிரசாரம்
x
தினத்தந்தி 28 March 2021 10:58 PM GMT (Updated: 2021-03-29T04:28:40+05:30)

மயிலாப்பூர் தொகுதியில் என்னை பெற்றி பெற செய்தால், சட்டமன்றத்தில் உங்கள் குரலாய் ஒலிப்பேன் என்று நடிகை ஸ்ரீபிரியா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை, 

தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மக்கள் கட்சியின் சென்னை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். கொரோனா சூழல் காரணமாக இவர் பெரியளவில் தொண்டர் படையை அழைத்துகொண்டு பிரசாரத்துக்கு செல்வது இல்லை. தன்னுடன் 5 பேரை மட்டும் அழைத்துக் கொண்டு வாக்குசேகரித்து வருகிறார். மேலும் அவர் முககவசம், கையுறை போன்ற கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து வாக்காளர்களை சந்தித்து வருகிறார்.

மேள-தாளம், ஆட்டம்-பாட்டம் போன்ற எந்தவித ஆடம்பரமும் இன்றி அமைதியான முறையில் வாக்காளர்களை சந்தித்து ‘டார்ச் லைட்‘ சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். அவர் நேற்று மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகரில் வீடு, வீடாக நடந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பூட்டிய வீட்டின் கதவை தட்டி, ‘நான் நடிகை ஸ்ரீபிரியா வந்திருக்கிறேன் என்று கூறி, துண்டுபிரசுரத்தை வழங்கி வாக்கு சேகரித்தார்.

100 நாட்களில் தீர்வு

பெண் வாக்காளர்களிடம், ‘பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண் வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்‘ என்று அன்பாக கேட்டுக்கொண்டார். பிரபல நடிகையாக சினிமாவில் ஜொலித்த நடிகை ஸ்ரீபிரியா தங்கள் தெருவில் நடந்து வருவதை கண்டு அவருடன் ‘செல்பி‘ எடுத்து கொள்வதில் பலர் ஆர்வம் காட்டினர். அவரும் சலிக்காமல் வாக்காளர்களின் அன்புக்கு கட்டுப்பட்டார்.

மயிலாப்பூர் தொகுதியில், ‘நீங்கள் என்னை வெற்றி பெற செய்து எம்.எல்.ஏ. ஆக்கினால், உங்களது குரலாக சட்டமன்றத்தில் எப்போதும் எனது குரல் ஒலிக்கும். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாறி, மாறி வாக்களித்து நீங்கள் ஏமாறியது போதும். இந்த முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள், குறைகள் 100 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும்‘ என்று ஸ்ரீபிரியா வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

நடிகை என்பதற்காக...

பிரசாரத்தின்போது நடிகை ஸ்ரீபிரியா, ‘தினத்தந்தி‘ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மயிலாப்பூர் தொகுதியில் மெரினா கடற்கரை போன்ற பிரபலமான இடங்கள் இருந்தாலும், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத அன்னை சத்யா நகர் போன்ற பகுதிகளும் இருக்கிறது. நான் இந்த பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேல் நடந்து சென்று வாக்கு சேகரித்தேன். இதில் எனக்கு கால் வலி ஏற்படவில்லை. இந்த மக்களின் நிலைமையை கண்டு மன வலி தான் ஏற்பட்டது. எனவே இந்த தொகுதியில் உள்ள மேல்தட்டு மக்கள் கீழ்தட்டு மக்கள் முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

நான் நடிகை என்பதற்காக எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றால், இந்த தொகுதிக்கு நல்லது செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story