சேலத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் ஸ்டாலின்-ராகுல் பிரசாரம்


சேலத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் ஸ்டாலின்-ராகுல் பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2021 6:45 AM IST (Updated: 29 March 2021 6:45 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தமிழகத்தின் உரிமைகளை மீட்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

சேலம், 

தமிழக சட்டசபை தேர்தலுக்கானவாக்குப்பதிவு தேதி நெருங்குவதால் அரசியல் கட்சிகளி்ன் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

தமிழக தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது தமிழகத்தின் உரிமைகளை மீட்க அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பாதாளத்திற்கு போய் விட்டது

கடந்த பத்தாண்டு காலமாகத் தமிழ்நாடு பாதாளத்திற்கு போயிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஐம்பதாண்டுகாலம் இந்தத் தமிழகம் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு - மோடிக்கும் அமித்ஷாவிற்கும் அடிபணிந்து கிடக்கும் ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீட்டைக் கொண்டு வந்து உள்ளே நுழைத்து விட்டார்கள். புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து கல்வியைப் பாழாக்கி இருக்கிறார்கள். தாய்மொழியாம் நம்முடைய தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாநில உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் வேதனையோடு எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ரசாயன தாக்குதல்

எனவே தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்ல, நாங்கள் எல்லாம் வெற்றி பெற்றுப் பொறுப்பில் உட்கார வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இந்தத் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக, நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக, நாம் இழந்திருக்கும் உரிமையை நிலை நாட்டுவதற்காக, பத்தாண்டு காலத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பதற்காக, நடைபெறவிருக்கும் தேர்தல் என்பதை நீங்கள் தயவு கூர்ந்து உணர்ந்தாக வேண்டும்.

காவிரி உரிமையைத் தர முடியாத மத்திய அரசு, அந்த உரிமையைத் தட்டிக் கேட்க முடியாத தமிழ்நாட்டில் இருக்கும் மாநில அரசு. அதனால் தமிழகம் பாழ்பட்டு போயிருக்கிறது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினா, கூடங்குளம் போன்ற அணு உலைகள். சேலம் எட்டு வழிச் சாலை. இவையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தும் ரசாயன தாக்குதலாக அமைந்து இருக்கிறது. நமது உரிமைகளை மீட்க அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும்.

அ.தி.மு.க. நிழலில் பா.ஜ.க.

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, நீட்தேர்வைக் கொண்டு வந்தது, மத்திய அரசு பணிகளில்தமிழில் பேசக்கூடாது, தமிழகப் பணிகளில் வட மாநிலத்தவரை கொண்டு வந்து நுழைப்பது இவையெல்லாம் கலாசார தாக்குதல்கள். எனவே இந்த இரசாயன தாக்குதலையும், கலாசார தாக்குதலையும் மத்திய அரசு நம்மீது நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த ரசாயனத் தாக்குதலையும், கலாசார தாக்குதலையும் எதிர்க்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உண்டு.

அ.தி.மு.க.வால் முடியவே முடியாது என்பதைக் கடந்த 5 வருடங்களாக நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்ற முடியவில்லை. அதனால் அ.தி. மு.க.வை மிரட்டி அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சகோதரர் ராகுல்

இங்கே இளம் தலைவர் ராகுல் வந்திருக்கிறார்கள். அவரிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பான வேண்டுகோள் அல்ல; உரிமையான வேண்டுகோள். அவரிடத்தில் தொலைபேசியில் பேசும் போது சில நேரங்களில், சார்… சார்… என்று பேசுவேன். அவர் உடனே மறுப்பார். இனிமேல் என்னை சார் என்று கூப்பிட கூடாது. ‘பிரதர்’ என்றுதான் கூப்பிட வேண்டும். ஒரு சகோதரனாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். எனவே சகோதரர் ராகுல் அவர்களே… உங்களுக்கு ஒரு உரிமை கலந்த அன்பான வேண்டுகோள்.

இன்றைக்கு இந்தியா ஒரு மதவாத பாசிச கும்பலிடம் மாட்டி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த இந்தியாவைக் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்று சேர்ந்து இருக்கிறது. அவ்வாறு சேர்ந்த காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி பெற முடியவில்லை.

மத்தியில் இதேபோன்று கூட்டணி

நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் கருத்துக் கணிப்புகளில் எல்லாம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பா.ஜ.க. வாஷ் அவுட் என்ற நிலைதான். ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் 37 சதவீதம் தான். 63 சதவீத மக்கள் பா.ஜ.க.வை எதிர்த்து, பிரித்து வாக்களித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போன்று இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. அதனால் சகோதரர் ராகுல் அவர்களே, உங்களை அன்போடு கேட்கிறேன். நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக மத்தியில், இந்திய அளவில் இதுபோன்ற கூட்டணி அமைவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அந்தப் பணிகளில் நீங்கள் இறங்கிட வேண்டும் என்று இங்குள்ள அனைவரின் சார்பிலும், விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கருணாநிதிக்கு அண்ணாவிற்கு பக்கத்தில் ஆறடி இடம் கொடுக்க மறுத்த அ.தி.மு.க. அரசுக்கு இனிமேல் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?. என்பதை கவனத்தில் கொண்டு வாக்களியுங்கள். தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர்கள்

கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் சேலம் வடக்கு-ராஜேந்திரன், சேலம் மேற்கு-சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், சேலம் தெற்கு-ஏ.எஸ்.சரவணன், ஆத்தூர்-சின்னதுரை, கெங்கவல்லி-ரேகாபிரியதர்ஷினி, ஏற்காடு-தமிழ்ச்செல்வன், வீரபாண்டி-டாக்டர் தருண், எடப்பாடி-சம்பத்குமார், மேட்டூர்- சீனிவாச பெருமாள், சங்ககிரி-ராஜேஷ், ஓமலூர்-மோகன்குமாரமங்கலம் (காங்கிரஸ்) மற்றும் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story