"தெர்மாகோலை நான் கண்டுபிடிக்கவில்லை" - செல்லூர் ராஜு


தெர்மாகோலை நான் கண்டுபிடிக்கவில்லை - செல்லூர் ராஜு
x
தினத்தந்தி 29 March 2021 6:57 AM GMT (Updated: 29 March 2021 6:57 AM GMT)

தெர்மாகோலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை மேற்கு தொகுதியில் உள்ள முத்துப்பேட்டையில் பிரசாரத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், என் துறையை பற்றி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆனாலும் சரி, யாரும் என்னை குறை சொல்ல முடியாது. என்னை யாரும் குற்றம் சொல்லாத அளவிற்கு நான் நடந்துள்ளேன். 

திமுக தலைவரோ, மற்றவர்களோ என்னை கேலி, கிண்டல் செய்து வேண்டுமானால் பேசலாம். அதுவும் நான் மதுரைக்காக பாடுபட்டதற்காகத்தான். தெர்மாகோலை நான் கண்டுபிடிக்கவில்லை. அதிகாரிகள் சொல்லி திட்டத்தை தொடங்கிவைத்தேன். அதைக்கூட தெர்மாகோல் ராஜா என்று உலகம் முழுவதும் பரவவிட்டுவிட்டனர். அதைத்தான் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் தற்போது பேசி வருகின்றனர். அதை நான் பொருட்படுத்தவில்லை. நான் தவறு செய்தேன் என்று எங்கும் சொல்ல முடியாது’ என்றார்.

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வைகை அணையின் நீர்நிலைகள் மேல் தேர்மாகோல் அட்டைகளை கொண்டு மூட திட்டம் 2017-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டம் தோல்வியடைந்தது. இந்த நிகழ்வு பெரும் விமர்சனங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story