தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய புகார் : அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்


தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய புகார் : அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
x
தினத்தந்தி 31 March 2021 7:38 AM GMT (Updated: 31 March 2021 7:38 AM GMT)

தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக எழுந்த புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பறக்கும்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். இவர் கடந்த 12-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது தேர்தல் பறக்கும்படையினர் அந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது தேர்தல் பறக்கும்படை அதிகாரி புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோடி அமைச்சர் கடம்பூர் ராஜூ உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக தொடர்ப்பட்ட புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Next Story