"பிரதமர் மோடியிடம் அதிமுக அரசு சரணடைந்து விட்டது" - காங். பொதுச்செயலாளர் சுர்ஜிவாலா விமர்சனம்


பிரதமர் மோடியிடம் அதிமுக அரசு சரணடைந்து விட்டது - காங். பொதுச்செயலாளர் சுர்ஜிவாலா விமர்சனம்
x
தினத்தந்தி 31 March 2021 12:21 PM GMT (Updated: 2021-03-31T17:51:41+05:30)

அதிமுக அரசு பிரதமர் மோடியிடம் சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கூட்டணி கட்சிகளை ஆதரித்து காங்கிரஸ், பாஜக-வை சேர்ந்த முக்கியத்தலைவர் தமிழகத்தில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய சுர்ஜிவாலா, பிரதமர் மோடியிடம் அதிமுக அரசு சரணடைந்துவிட்டது. இதனால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும். பெண்கள் குறித்து பாஜகவினர் அவதூறாக பேசி வருவது குறித்து பிரதமர் மோடி முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். 

Next Story