உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி என்பது உலகமகா நடிப்பு
உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி என்பது உலகமகா நடிப்பு என்றும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்றும் போடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தேனி:
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடும் தங்கதமிழ்செல்வன் (போடி), என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்-தனி) ஆகியோருக்கு ஓட்டு கேட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போடியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
போடி தேவர் சிலை அருகில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்போது தோல்வி பயத்தில் என்னென்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
போடிக்கு வந்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக தாக்கிச் சென்றுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை இந்த மாவட்டத்தின் கொடை என்று சொல்லி, நீங்கள் இங்கேயே இருங்கள், வெளியே எங்கும் வந்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு போயிட்டார்.
இதைக் கூட புரியாமல் ஓ.பன்னீர்செல்வம் தலையாட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி இன்னொன்றும் சொன்னார். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அப்படிப் பார்த்தால் அ.தி.மு.க.வுக்கு முதன்முதலில் துரோகம் செய்தது யார்? ஆட்சிக்கு எதிராக 11 பேர் ஓட்டு போட்டார்களா? இல்லையா? ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட 11 பேர் டெபாசிட் வாங்கலாமா?
இப்போது ஓ.பன்னீர்செல்வத்தை பெரிய தியாகி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் தியாகி இல்லை.
பெரிய புத்திசாலி. ஏனென்றால் தோற்க போகின்ற அ.தி.மு.க.வுக்கு பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி இருப்பது ரொம்ப புத்திசாலித்தனம்.
விசாரணை கமிஷன்
அரசியலில் சிலருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு முறையல்ல 3 முறை முதல்-அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? இந்த நாட்டுக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதாவுக்காவது உண்மையாக இருந்தாரா? பதவிக்காக தர்ம யுத்தம் நடத்தினார்.
ஜெயலலிதா சாவுக்கு யார் காரணம்? என்று கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்றும், அதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் பேசினார்.
விசாரணை கமிஷன் அமைத்தவுடன் அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தார்கள்.
அதன் பிறகு அவர் விசாரணை கமிஷனை மறந்துவிட்டார். ஜெயலலிதா இருந்தவரை தரையை பார்த்து கும்பிட்டு கொண்டிருந்தவர். ஆனால் இன்றைக்கு ஜெயலலிதாவை தலைமுழுகி விட்டார்கள்.
ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்த இவரை தேனி மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? அவரை தேனி மாவட்டத்தில் இருந்து விரட்ட வேண்டுமா? வேண்டாமா?
ஜல்லிக்கட்டு நாயகன்
மே 2-ந்தேதி ஓட்டு எண்ணும் போது நாம் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம்.
அப்படி அமைகின்ற ஆட்சியானது, சமூக நீதிக்கான ஆட்சியாக இருக்கும். எல்லா சமூகத்தினரும் திருப்தி அடையக் கூடிய வகையில் நிச்சயமாக நாம் சட்டத்தை இயற்றுவோம்.
தேர்தல் வருகின்றபோது அவ்வப்போது பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து போகிறார். இதேபோன்று நேற்று முன்தினம் கொங்கு மண்டலத்திற்கு வந்திருக்கிறார். வரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை.
வந்தவர், தங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களையும், தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த திட்டங்களையும் சொல்லி இருந்தால், அது உண்மையாக இருந்தால் அதை வரவேற்க நான் காத்திருக்கிறேன். ஆனால், அவர் வந்து பொய் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
எப்போதெல்லாம் மோடி வருகிறாரோ அப்போது அந்த கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன பாடம் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்? அடிக்கடி வந்து போகட்டும். 2-ந்தேதியும் வரப்போகிறார் என்று சொல்கிறார்கள். வரட்டும், நல்லதுதான்.
உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்.
இவ்வளவு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருந்தார். இது என்ன நடிப்பு. சினிமாவில் தான் ஒரு வசனம் வரும். ‘உலகமகா நடிப்புடா இது' என்பார்கள். அதுமாதிரி இது.
இளைஞர்களே காரணம்
ஜல்லிக்கட்டு வந்ததற்கு காரணமே நம்முடைய இளைஞர்கள். அரசியல்வாதிகள் யாரும் கிடையாது.
அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் ஜல்லிக்கட்டு வந்தது.
அப்படிப்பட்ட இளைஞர்களை ஓ.பன்னீர்செல்வம் தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்.
அந்தப் போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி போலீசை வைத்து தடியடி நடத்தி, அங்கிருந்த ஆட்டோக்களை எரித்து கொடுமை படுத்தியதை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா?
பிரசாரத்தை தொடங்கியபோது நமது கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சொன்னேன். மக்களிடம் இருக்கும் எழுச்சியை பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம்.
அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. அ.தி.மு.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும், அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்க மாட்டார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக தான் இருப்பார்.
தேனி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் பா.ஜ.க. எம்.பி.யாக தான் இருக்கிறார்.
அவருடைய லெட்டர்பேடில் கூட அ.தி.மு.க. தலைவர் படம் இல்லை. மோடி படம் தான் இருக்கிறது. அப்படி ஒரு அடிமையாக இருக்கிறார்.
பச்சை துரோகம்
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது என்னென்ன செய்யப் போகிறோம் என்றும், என்னென்ன உறுதி மொழிகளை நிறைவேற்றப் போகிறோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லி இருக்கிறோம்.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அந்த விவசாயிகளை மோடி அழைத்து பேசினாரா? போராடும் விவசாயிகளை விவசாயிகள் அல்ல.
அவர்கள் தரகர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசினார். இந்த லட்சணத்தில் அவர் தன்னை விவசாயி என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அவர், பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு விவசாயத்துக்கு பச்சைத் துரோகம் செய்பவர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது.
மத வெறியை கொண்டுவந்து இந்த நாட்டை குட்டிச் சுவராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டை பொறுத்தவரை உங்கள் மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது.
இது தமிழ்நாடு. இது திராவிட மண். தந்தை பெரியார் பிறந்த மண். அண்ணா பிறந்த மண். கருணாநிதி வாழ்ந்த மண் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாம் இழந்த உரிமைகளை மீட்டாக வேண்டும். நம்முடைய உரிமைகள் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது.
அதை மீட்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story