நோட்டு, சீட்டு பேரம் இல்லாமல் தனித்து நிற்கிறோம் 'நாம் தமிழர் வேட்பாளர்களை கைவிட்டு விடாதீர்கள்' சீமான் உருக்கமாக வாக்கு சேகரிப்பு
‘‘நோட்டு, சீட்டு பேரம் இல்லாமல் தனித்து நிற்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கைவிட்டுவிடாதீர்கள்'' என்று சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் உருக்கமாக வாக்கு சேகரித்தார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
சீமான் நேற்று திருவொற்றியூர் தொகுதியில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் ‘விவசாயி' சின்னத்துக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:-
மாற்றம் வேண்டும் என்று நினைக்கிற மக்களின் சிந்தனையில் இருந்து உருவானது தான், நாங்கள் முன்னெடுத்துள்ள மாற்று அரசியல் புரட்சி. திரும்ப, திரும்ப தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு வாக்கு செலுத்தி எந்த மாற்றத்தையும் காணாமல், பெருத்த ஏமாற்றத்தை மட்டும் சந்தித்துள்ள மக்கள், இந்த முறை மிகப்பெரிய மாற்றத்துக்காக எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
உரக்க பேசுவேன், முழங்குவேன்...
தரமான கல்வி, மருத்துவம், தடையற்ற மின்சாரம், தூய குடிநீர், பயணத்துக்கு சரியான பாதை, பாதுகாப்பான சுற்றுச்சூழல், நஞ்சு இல்லாத உணவு ஆகியவை வேண்டும் என்றால், அதற்கு இருக்கிற ஒரே வாய்ப்பு ‘விவசாயி' சின்னம்தான். அதற்கு வாக்குகளை செலுத்தி எங்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
குறிப்பாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் உங்கள் அன்பு மகனான என்னை வெற்றி பெற வையுங்கள். உங்களுக்காகவும், உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழ் சொந்தங்களுக்காகவும் குரல் கொடுத்து வரும் உங்கள் பிள்ளையாகிய நான் சட்டமன்றத்துக்குள் சென்று உங்கள் உரிமைகளுக்காகவும், எதிர்கால நல்வாழ்வுக்காகவும் உரக்க பேசுவேன், முழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்.
நோட்டு, சீட்டு பேரம் இல்லாமல் மக்களை நம்பி 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்து நிற்கிறோம். உங்களை நம்பி நிற்கிற எங்களை கைவிட்டுவிடாதீர்கள்.
இவ்வாறு சீமான் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார்.
தென்சென்னையில் பிரசாரம்
சென்னையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் த.சா.ராஜேந்திரன் (விருகம்பாக்கம்), பா.சுரேஷ்குமார் (சைதாப்பேட்டை), இரா.கார்த்திகேயன் (ஆலந்தூர்), பா.சிவசங்கரி (தியாகராயநகர்), கி.மகாலட்சுமி (மயிலாப்பூர்), மே.கீர்த்தனா (வேளச்சேரி) ஆகியோரை ஆதரித்தும் சீமான் நேற்று திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
Related Tags :
Next Story