50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை - சீமான் குற்றச்சாட்டு
50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சீமான், தரமற்றவர்கள் கையில் நமது அதிகாரத்தை 50 ஆண்டுகள் (திராவிட ஆட்சி) கொடுத்துவிட்டதால் எந்த தொகுதியிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை.
சென்னையில் பாதி அளவுடைய சிங்கப்பூர் அந்த நாட்டை முழுமையாக சுற்றி வர 45 நிமிடங்கள் தான் தேவைப்படுகிறது. கல்வியின் தரத்தில் அந்நாட்டு உலகில் 3-வது இடத்தில் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது ஆனால் மாறுதல் வருகிறதா? திமுக ஆண்டுள்ளது, அதிமுக ஆண்டுள்ளது. மாற்றம் வந்துள்ளதா? முன்னேற்றம் வந்துள்ளதா? வாழ்வில் ஏற்றம் வந்துள்ளதா? வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? இலவசத்திற்கு கையேந்தும் நிலையில் தான் இன்னும் நம் மக்கள் உள்ளனர். இதை மாற்றுவதற்கு என்ன வழி என்பதை சிந்திக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story