வருமானவரி சோதனை போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது - துரைமுருகன்


வருமானவரி சோதனை  போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது - துரைமுருகன்
x
தினத்தந்தி 2 April 2021 5:30 AM GMT (Updated: 2021-04-02T11:00:44+05:30)

வருமானவரி சோதனை போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று வேலூரில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. செந்தாமரை, கணவர் சபரீசனோடு  சென்னை நீலாங்கரை  இல்லத்தில் வசித்து வருகின்றனர். இன்று அவரது  வீட்டில் வருமானவரித்துறை  அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டனர்.திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானவரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும். இத்தகைய செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகமல்ல என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஐ.டி. சோதனை நடப்பது உள்நோக்கம் கொண்டது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளனர். 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- 

நெருக்கடி நிலையையே சந்தித்த இயக்கம் திமுக. இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் நேரில் ஊழல் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன். கடந்த தேர்தலில் கண்டெய்னர் லாரியில் ரூபாய் 570 கோடி பிடிபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Next Story