5 மாநில சட்டசபை தேர்தல் : தமிழகத்தில் அ.தி.மு.க. வைவிட தி.மு.க. வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் அதிகம்


5 மாநில சட்டசபை தேர்தல் : தமிழகத்தில் அ.தி.மு.க. வைவிட தி.மு.க. வேட்பாளர்கள் மீது  குற்ற வழக்குகள் அதிகம்
x
தினத்தந்தி 2 April 2021 10:35 AM GMT (Updated: 2 April 2021 10:35 AM GMT)

5 மாநிலத் தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் 18 சதவீதம் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. தமிழகத்தில் 466 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

புதுடெல்லி

5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 6 ஆயிரத்து 318 வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் மீது  கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) ஆய்வில் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தம் 6,792 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 6,318 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) ஆய்வு செய்தது. இதில் மேற்கு வங்காத்தில் 3 கட்டத் தேர்தலில் வேட்பாளர்கள் வரை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 6,318 வேட்பாளர்களை ஆய்வு செய்ததில் 18 சதவீதம் பேர் அதாவது, 1,157  வேட்பாளர்கள் மீதுகுற்ற வழக்குகள் இருக்கின்றன. 10 சதவீதம் பேர் மீது அதாவது 632 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 1,317 வேட்பாளர்கள் (21 சதவீதம்) கோடீஸ்வரர்கள்.

மேற்கு வங்காளத்தில் 3 கட்டத் தேர்தல் வரை மட்டுமே வேட்பாளர்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டனர். இதில் 567 வேட்பாளர்களில் 144 பேர் (25 சத்-வீதம்) மீது கிரிமினல் வழக்குகளும், 121 பேர் (21 சதவீதம்) மீது தீவிரமான கிரிமினல் வழக்குகளும் உள்ளன.

தமிழகத்தில் 3,559 வேட்பாளர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதில் 466 வேட்பாளர்கள் (13 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகளும், 207 பேர் மீது (6 சதவீத ) தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.

இதில் திமுக வேட்பாளர்கள் 191 பேரில் 143 பேர் மீது (75 சத்வீதம் ) கிரிமினல் வழக்குகளும், 55 பேர் மீது (29 சதவீதம் ) தீவிரமான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

அதிமுகவில் 197 வேட்பாளர்களில் 50 பேர் (25 சதவீதம் ) மீது அறிவிக்கப்பட்ட குற்ற வழக்குகளும், 21 பேர் மீது (11 சதவீதம் ) தீவிரமான கிரிமினல் வழக்குகளும் உள்ளன.

கேரளாவில் மொத்தமுள்ள 928 வேட்பாளர்களில் 355 பேர் மீது (38 சதவீதம்) அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளும், 167 பேர் மீது (18 சதவீதம்) தீவிரமான கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

அசாம் மாநிலத்தில் 941 வேட்பாளர்களில் 138 பேர் மீது (15 சதவீதம்) அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளும், 109 பேருக்கு எதிராக (12 சதவீதம்) தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.

புதுச்சேரியில் 323 வேட்பாளர்களில் 54 பேருக்கு எதிராக (17 சதவீதம்) அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளும், 28 பேருக்கு எதிராக (9 சதவீதம்) தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.

மேற்கு வங்கத்தில் 3 கட்டத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 107 வேட்பாளர்களில் 29 (27 சதவீதம்) பேருக்கு எதிராக அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளும், 23 (21 சதவீதம் ) பேருக்கு எதிராக தீவிரமான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

பாஜகவில் 319 வேட்பாளர்களில் 163 பேர் (51 சதவீதம்) மீது  கிரிமினல் வழக்குகளும், 108 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.

காங்கிரசில் 239 வேட்பாளர்களில் 132 பேர் (55 சதவீதம்) மீது  குற்ற வழக்குகளும், 108 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களில் 77 பேரில் 39 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 3 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன. சிபிஐ வேட்பாளர்ளில் 35 பேரில் 14 பேர் மீது அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளும், 3 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.

ஒரு தொகுதிக்கு 3 அல்லது அதற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்  கிரிமினல் வழக்குகளை உடையவர்களாக இருந்தால், அது ரெட் அலர்ட் தொகுதியாகக் குறிப்பிடப்படும். அந்த வகையில் 621 தொகுதிகளில் 191 தொகுதிகள் ரெட் அலர்ட் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் 74 ரெட் அலர்ட் தொகுதிகளும், கேரளாவில் 75 தொகுதிகளும், மேற்கு வங்கத்தில் 21 தொகுதிகளும், அசாமில் 13 தொகுதிகளும், புதுச்சேரியில் 8 தொகுதிகளும் உள்ளன. இவ்வாறு ஏடிஆர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story