தேர்தல் அன்று வாக்காளர்களுக்கு வழங்க வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2,051 மதுபாட்டில்கள் பறிமுதல் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் கைது


தேர்தல் அன்று வாக்காளர்களுக்கு வழங்க வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2,051 மதுபாட்டில்கள் பறிமுதல் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2021 6:34 AM IST (Updated: 4 April 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அன்று வாக்காளர்களுக்கு வழங்க வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,051 மதுபாட்டில்களை தேர்தல் கூடுதல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. கிளைசெயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர், 

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (6-ந்தேதி) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 6-ந்தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ந்தேதியும் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மதுவை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுக்கவும், வாக்காளர்களுக்கு மதுபாட்டில்கள் வினியோகிப்பதை தடுக்கவும், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இந்தநிலையில் சேவூர் அருகே பந்தம்பாளையம் பகுதியில் தேர்தல் நாளன்று பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் சேவூர் பந்தம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது வீட்டில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக 2,051 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,051 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். பின்னர் அந்த மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர், சேவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைந்தனர். இதுதொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் (வயது 57), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் அய்யப்பன் (35) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முருகேசன், பந்தம்பாளையம் அ.தி.மு.க. கிளை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story