வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்ட நடிகை ஸ்ரீபிரியா


வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்ட நடிகை ஸ்ரீபிரியா
x
தினத்தந்தி 4 April 2021 10:06 AM IST (Updated: 4 April 2021 10:06 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா, வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்டார். அப்போது, டார்ச்லைட் வெளிச்சம் போல மக்களுக்கு ஒளியாக இருப்பேன் என பேசினார்.

சென்னை, 

மக்கள் நீதி மய்யம், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் நடிகை ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பி.எம்.தர்கா, புதுத்தெரு, பி.பி.சாலை, ரோட்டரி நகர், மெக்காபுரம், துவாரகா காலனி, கோகுலம் காலனி புதுத்தெரு, அப்பர்சாமி கோவில்தெரு, பாலகிருஷ்ண தெரு, சிவசாமி ரோடு, கல்லுக்காரன் தோட்டம், அப்பாதுரை தோட்டம், ராக்கியப்பன் தெரு உள்பட சில பகுதிகளில் நேற்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.

முக கவசம் அணிய வலியுறுத்தல்

பின்னர், கபாலீசுவரர் கோவில் அனைத்து மாடவீதிகள், சன்னதி தெரு, நடுத்தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் கோவில் தெரு, புதுப்பள்ளி தெரு, காரணீசுவரர் பக்கோடா தெரு, கைலாசபுரம் 1 முதல் 5 தெரு வரை, ஆறுமுகம் பிள்ளை தெரு, நொச்சிக்குப்பம் உள்பட சில இடங்களில் பிற்பகல் மற்றும் மாலையில் வாக்குகள் சேகரித்தார்.

வாக்காளர்களை சந்தித்த ஸ்ரீபிரியா, ‘நீங்கள் ஆரோக்கியத்துடன் வாக்களிக்க வேண்டும். ஆகவே முக கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்' என்று சொல்லியபடி ஓட்டு கேட்டார். அப்போது முக கவசம் அணியாதவர்களை பார்த்து, கண்டிப்பாக அணியும்படி அன்போடு வலியுறுத்தினார்.

மேலும், ‘சினிமாக்காரர் என்று எனக்கு ஓட்டு போடவேண்டாம். நான் செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால் எனக்கு வாக்களியுங்கள். நான் வெற்றி பெற்று தொகுதிக்கு ஏதாவது செய்யாவிட்டால், மக்கள் நீதி மய்யத்தில் புகார் அளித்தால் என்னை நீக்கிவிடுவார்கள்' என்று கூறியும் வாக்குகள் கேட்டார்.

நியாயத்துக்காக போராடுவேன்

அதைத் தொடர்ந்து, தனது வெற்றிவாய்ப்பு குறித்து நிருபர்களிடம் ஸ்ரீபிரியா கூறுகையில், ‘எங்களுக்கு வெற்றிவாய்ப்புக்கான ஆதரவு அதிகம் இருக்கிறது. மயிலாப்பூர் மக்கள் நீதி மய்யத்தின் இடமாக அமையும் என்று நிச்சயமாக நம்புகிறேன். நான் ஒரு சண்டைக்காரி. நியாயத்துக்காக போராடுவேன். டார்ச்லைட் சின்னத்தில் வெற்றி பெற்று, டார்ச்லைட் வெளிச்சம் போல, மக்களின் தரத்தை உயர்த்த ஒளியாக இருப்பேன்' என்றார்.

Next Story