ஊழல் ஆட்சி நடத்துகிற அதிமுக ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
ஊழல் ஆட்சி நடத்துகிற அதிமுக ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குப் பாடம் புகட்ட, அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பதென தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தல் பிரச்சாரங்களில் பெருந்திரளான, அடர்த்தியான மக்கள் கூட்டம் அணி திரண்டு வருவதே அதற்கு சாட்சி. இதை சகித்துக்கொள்ள முடியாத அதிமுக, நாளேடுகளில் பக்கம் பக்கமாக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைக் கூறி, கடைசி நாளில் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சாதனைகள் என்று எதையும் கூற துணிவற்ற நிலையில் இத்தகைய அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவது பாஜக, அதிமுக கூட்டணிக்குத் தோல்வி பயம் வெளிப்பட்டு விட்டதையே வெளிப்படுத்துகிறது. அதிமுக அரசின் மொத்த கடன் ரூபாய் 5 லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடி. ஆக, 8 லட்சம் கோடி கடனில் திவாலான நிலையில் இருக்கும் போது, இலவச அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வாரி வழங்கலாமா ? எடப்பாடி பழனிசாமி முதல்வராகும்போது அறிவிப்புகளை வெளியிடலாம்.
ஆனால், ஆட்சியிலிருந்து வெளியேறுகிற போது அறிவிப்புகளை வெளியிட என்ன உரிமை இருக்கிறது ? ஆட்சியில் இருக்கும்போது செய்யாததை மூடி மறைக்க இத்தகைய இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றலாமா?
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி தொடர்வதற்கு நியாயமான காரணங்கள் ஏதாவது ஒன்றைக் கூற முடியுமா? வாக்காளர்கள் எடப்பாடியையும், தளபதி ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அடுத்த முதல்வராக மக்கள் யாரைத் தேர்வு செய்வார்கள் என்பதைத்தான் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெளிவாகக் கூறுகின்றன. ஐம்பதாண்டு கால அரசியல், நிர்வாக அனுபவம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது காலத்தின் கட்டாயம்.
இதற்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகி வருவதைத் தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆட்சி மாற்றம் உறுதி என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது. மத்திய பாஜக அரசின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க, அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற அதிமுக ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்பட முடியும்'.
இவ்வாறு அதில் கூறப்ப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story