தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இரவு 7 மணியுடன் ஓய்ந்தது


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இரவு 7 மணியுடன் ஓய்ந்தது
x
தினத்தந்தி 4 April 2021 1:33 PM GMT (Updated: 4 April 2021 1:33 PM GMT)

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இரவு 7 மணியுடன் ஓய்ந்தது . அதன்பிறகு, கருத்து கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற 
இருக்கிறது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திரமோடி, அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய 
ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு, தங்கள் கட்சி 

வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டினார்கள். 

இறுதிக்கட்ட  பிரசாரத்தில் வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்குசேகரித்தனர். எடப்பாடி பகுதியில் முதல்-அமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உங்களுக்காக உழைக்க உத்தரவிடுங்கள் என மக்கள் மத்தியில் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக மக்களின் மேன்மைக்காக உழைக்க திட்டங்களுடன் காத்திருக்கிறேன்.  மக்கள் முடிவெடுத்து உத்தரவிடுங்கள், மக்களாட்சியை நான் நடத்தி காட்டுகிறேன். 12,000 கி.மீ பயணம் செய்து மக்களை சந்தித்தேன். மக்களின் கோப அலையை சுனாமியாக பார்த்தேன்.அதிமுக ஆட்சியில் தமிழகம் சந்தித்த அத்தனை பின்னடைவுகளையும் சரிசெய்ய வேண்டும். பாஜகவின் கொல்லைப்புற அரசாங்கத்தை ஈபிஎஸ் நடத்தினார்.

கருணாநிதியின் மகனாக மட்டுமின்றி மக்களின் மகனாக நான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளேன் என்றார்.

கோவில்பட்டியில் கமல்ஹாசன் பேசியதாவது:- என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகவே யாருமே முழுநேர அரசியல்வாதி கிடையாது. நான் விரும்பி வந்தேன் என்பதை விட வரலாறு என்னை இங்கு தூக்கி கொண்டு வந்திருக்கிறது.

சித்தரவையில் சிக்கி தவித்த சீதையை மீட்ட அனுமனை போல தமிழக மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது.  மாலை 7 மணிக்கு பின் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.  7 மணிக்கு பின் 

வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பிரசாரம் செய்ய கூடாது என்றும், தடையை மீறி பிரசாரம் செய்தால் 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

7 மணிக்கு பின் தேர்தல் தொடர்பான  பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

Next Story