முட்டை வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் சிக்கியது
கொடைக்கானல் அருகே வாகன சோதனையில் முட்டை வியாபாரியிடம் உரிய ஆவணமில்லாமல் கொண்டு சென்ற ரூ.75 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று மாலை கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் மயிலாடும்பாறை என்னுமிடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வேனில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்றும், கொடைக்கானல் மலை பகுதியில் மொத்தமாக முட்டை வியாபாரம் செய்வதும் தெரியவந்தது.
அவரிடம் ரூ.74 ஆயிரத்து 930 இருந்தது. அதற்கு உரிய ஆவணம் இல்லை.
இதனையடுத்து அந்த பணம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story