‘ஜனநாயக கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி’


‘ஜனநாயக கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி’
x
தினத்தந்தி 7 April 2021 3:11 AM IST (Updated: 7 April 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

‘ஜனநாயக கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று திண்டுக்கல்லை சேர்ந்த இளம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்தனர்.

திண்டுக்கல்: 

சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தங்கள் வாக்கை பதிவு செய்த அனுபவம் குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த இளம் வாக்காளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஜனநாயக கடமை
கார்த்திகா (கோவிந்தாபுரம்):- நான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். 

சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க போகிறேன் என்று நினைக்கும் போதே பரவசத்தை ஏற்படுத்தியது. 

எனவே சென்னையில் இருந்து நேற்று முன்தினமே புறப்பட்டு கோவிந்தாபுரத்துக்கு வந்துவிட்டேன். 

பின்னர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

 அப்போது எனது பெற்றோர், நண்பர்கள் எனக்கு உதவினர். அதன் அடிப்படையில் எனது முதல் வாக்கை பதிவு செய்தேன். 

ஜனநாயக கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.

காயத்ரி (லட்சுமிபுரம்):- முதல் முறையாக வாக்களிப்பதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருந்தது. 

எனது பெற்றோர் அது குறித்து விளக்கமளித்தனர். மேலும் பத்திரிகைகளிலும் அதுகுறித்து செய்திகள் வந்தது. 

ஆனாலும் எனக்குள் ஒருவித குழப்பம் இருந்துகொண்டே தான் இருந்தது. பின்னர் வாக்குச்சாவடிக்கு வந்து முதல் முறையாக எனது வாக்கை பதிவு செய்ததும் அந்த குழப்பமும் நீங்கியது. 

தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று என்னை போன்ற இளையதலைமுறையினர் விரும்புகின்றனர்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும்
மதுமிதா (லட்சுமிபுரம்) :- முதன் முதலில் வாக்களித்தது பெருமிதமாக இருந்தது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ததில் எனது பங்கும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

மேலும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கொண்டு வருபவர்கள் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும். அதை மனதில் கொண்டே எனது வாக்கை பதிவு செய்தேன்.

நவின்குமார் (கோவிந்தாபுரம்) :- சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

வாக்களிப்பது நமது உரிமை. அதனை எதற்காகவும் நாம் விட்டுக்கொடுக்க கூடாது. மக்களுக்கு நன்மை செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 

கடந்தமுறை நடந்த சட்டமன்ற தேர்தலின் போது எனது பெற்றோருடன் வந்திருந்தேன். 

அப்போது வாக்குச்சாவடியில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்கை பதிவு செய்தனர்.

சுபாஷினி (பழனி):-
இந்த தேர்தலில், நான் முதன் முதலாக என்னுடைய வாக்கை பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 

ஜனநாயக கடமையை ஆற்றிய ஒரு மனநிறைவு உள்ளது. ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால் எவ்வித பதற்றமும் இன்றி வாக்களித்து வந்தேன். 

தொடர்ந்து வாக்களித்ததை எனது உறவினர்களிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். 

மேலும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களிடமும் வாக்களிக்குமாறு தெரிவித்தேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story