நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை : பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை :மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6-ந் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அன்று இரவே அனைத்து மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓட்டு எண்ணும் மையங்கள் அனைத்திலும் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் கண்காணித்து வருகிறார்கள். இதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3-வதாக ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணும் மையங்களின் நுழைவு வாயிலில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்படி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
கடந்த 24 நாட்களாக வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகலாக போலீசாரும், துணை ராணுவப்படையினரும் கண்காணித்து வரும் நிலையில் நாளை மறுநாள் (மே 2-ந் தேதி) 234 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக காவல்துறையில் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். இவர்களில் 1 லட்சம் காவலர்கள் ஓட்டு எண்ணிக்கை அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு 24 மணிநேரமும் சுழலும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டு எண்ணிக்கை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அன்றைய தினம் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்களை தவிர மற்றவர்கள் வெளியில் வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் ஓட்டு எண்ணிக்கை அன்று அரசியல் கட்சியினர் கூட்டமாக சேர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொரோனா பரவலுக்கு மேலும் வழி வகுத்து விடக்கூடாது என்பதால் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் 24 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். இவர்களில் 20 ஆயிரம் காவலர்கள் ஓட்டு எண்ணிக்கை அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறி யாராவது பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மே 2-ந் தேதியன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இருப்பினும் நாளை (மே 1-ந் தேதி) இரவில் இருந்தே பாதுகாப்பு பணிகளை போலீசார் தொடங்குகிறார்கள். வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் யார்- யாரை ஈடுபடுத்த வேண்டும்? ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் யார்- யார் என்பது பற்றிய பட்டியல் தயாராக உள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள போலீசார் தவறாமல் பாதுகாப்பு பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போலீசார் 28 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்று கொரோனா பாதித்த காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பணியின் போது உஷாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் மையங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சியினர் முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story