தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை


தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 2:20 AM GMT (Updated: 2 May 2021 2:20 AM GMT)

தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.  இன்னும் சற்று நேரத்தில்  வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது.

ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக திரையில் அறிவிக்கப்படும். குறைந்தது 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகள்  மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

கொரோனா முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீட்டைவிட்டு யாரும் வெளியே வர வேண்டாம். வாக்குஎண்ணும் மையத்துக்கு வெளியே போலீசார் தவிர மற்றவர்கள் வருவதற்குகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பிரச்சினை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளைக் கேட்டு அரசியல் கட்சியினர் உட்பட யாராவது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story