தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; சில மணி நேரங்களில் முன்னணி நிலவரம் வெளியாகும்


தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது;  சில மணி நேரங்களில் முன்னணி நிலவரம் வெளியாகும்
x

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. கட்சிகளின் முன்னணி நிலவரம் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகத் தொடங்கும்.

தமிழக சட்டச்பை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 

ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக திரையில் அறிவிக்கப்படும். குறைந்தது 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட உள்ளன. கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகடிவ்’ சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அவர்கள்2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானால் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்த கிருமிநாசினி, முக கவசங்கள், உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் உள்ளிட்டவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, அசம்பாவிதங்களை தவிர்க்க மையத்திற்கு வெளியே பேரிகார்டுகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில தேர்தல்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து, முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறிய தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவு பிற்பகல் 3 மணியளவில் தெரிய வாய்ப்பு உள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும்.

பிற்பகலுக்குள் வேட்பாளரின் முன்னணி விபரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், கேமரா, துப்பாக்கி, வெடிபொருட்கள், குடை, டிபன் பாக்ஸ், பேனா, பாட்டில், திண்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முகவர்களுக்கு மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது. நுழைவு சீட்டு வைத்திருக்கும் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும்.

Next Story