பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 7:16 PM IST (Updated: 2 May 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

திண்டுக்கல்: 

7 தொகுதிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.


இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. 

மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஒரு மேற்பார்வையயாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர். 


 தபால் வாக்குகள் 
இதேபோல் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 4 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. இதில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் தொடங்கியது. 

இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்குள் வருவதற்கு தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தனித்தனியாக பாதை அமைக்கப்பட்டு இருந்தது. 

அந்த பாதைகளின் வழியாக மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் காலை 6 மணிக்கு அலுவலர்களும், அதன்பிறகு வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த பாதுகாப்பு
மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் ஆர்வமுடன் தங்களுடைய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை குறிப்பெடுத்தனர்.

 ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் அறிவிக்கப்பட்டது. 

ஒவ்வொரு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றதும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த வாக்கு எண்ணிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயலட்சுமி, 7 தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர். 

மேலும் வாக்கு எண்ணிக்கையையொட்டி மையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Next Story