இந்த மாபெரும் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - பினராயி விஜயன் பேச்சு
இந்த மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன் என்று முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. பாஜக தனித்து போட்டியிட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இடதுசாரிகள் கூட்டணி 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில், அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது தொடர்பாக கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளா தீர்ப்பு வழங்கியுள்ளது. கொரோனா தொடர்ந்து பரவி வரும் சூழ்நிலையில் இது கொண்டாடுவதற்கான நேரமில்லை. கொரோனாவுக்கு எதிராக போரிடுவதற்கான நேரமிது.
இந்த மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன். கேரளாவில் ஆட்சியமைக்க முன்னோக்கி நகர்வதாக மூத்த பாஜக தலைவர்கள் அறிவித்தனர்.
அந்த நேரத்தில் பாஜவினரின் தற்போதைய எண்ணிக்கையும் இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும் என்று நாங்கள் கூறினோம். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்மந்திரிகள் மற்றும் பல பாஜக தலைவர்கள் இங்கு வந்து பிரசாரம் செய்தனர்.
பதவியேற்புவிழா நாளை நடைபெறும் என்று வெளியான தகவல்கள் தவறானவை. திருவனந்தபுரம் சென்ற பின்னர் எனது ராஜினாமா (தற்போதைய முதல் மந்திரி பதவியில் இருந்து) கடிதம் சம்பிக்க உள்ளேன். எஞ்சிய நடவடிக்கைகள் கட்சி கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனைக்கு பின்னரே மேற்கொள்ளப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story