தோழர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்கள் - திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட்


தோழர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்கள் - திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட்
x
தினத்தந்தி 2 May 2021 5:43 PM GMT (Updated: 2 May 2021 5:45 PM GMT)

கேரள சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை,

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. பாஜக தனித்து போட்டியிட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைய உள்ளது உறுதியாகியுள்ளது.

தற்போது முதல்மந்திரியாக செயல்பட்டு வரும் பினராயி விஜயனே மீண்டும் கேரள முதல்மந்திரியாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பினராயி விஜயனுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கேரள சட்டசபை தேர்தலில் தனது கட்சியை (இடது ஜனநாயக முன்னணி) வெற்றிக்கு அழைத்துசென்ற தோழர் பினராயி விஜயனுக்கு திமுக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

அவரின் (பினராயி விஜயன்) அளவிடப்பட்ட மற்றும் தீர்க்கமான தலைமை கேரளா மேலும் சிறப்பான உச்சத்தை அடைய உதவுகிறது. மேலும், அவருக்கு மற்றுமொரு வெற்றிகரமான பதவிகாலமாக அமைய நான் வாழ்த்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

முக ஸ்டாலின் பதிவிட்ட வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அன்பான, முக ஸ்டாலின் உங்களின் எழுச்சிகரமான வெற்றிக்கும் வாழ்த்துக்கள். உங்களின் தலைமையின் கீழ் தமிழகம் மதவாத சக்திகளை நுழையவிடாது என்றும் நான் உறுதியாக உள்ளேன்’ என்றார்.  



Next Story