அசாம் சட்டசபை தேர்தல்: வெற்றியை தக்க வைத்து பா.ஜ.க. வரலாற்று சாதனை


அசாம் சட்டசபை தேர்தல்:  வெற்றியை தக்க வைத்து பா.ஜ.க. வரலாற்று சாதனை
x
தினத்தந்தி 3 May 2021 1:03 AM IST (Updated: 3 May 2021 6:25 AM IST)
t-max-icont-min-icon

அசாம் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று பா.ஜ.க. வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

கவுகாத்தி,

126 உறுப்பினர்களுக்கான அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதன்படி, கடந்த மார்ச் 27ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலும், ஏப்ரல் 1ந்தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தலும், தொடர்ந்து ஏப்ரல் 6ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகாகூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.

இதேவேளையில், பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.  தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது.

தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.  இந்நிலையில், இரவு 11 மணி நிலவரப்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது 76 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனால், ஆட்சி அமைக்க போதிய இடங்களுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க வரலாற்று சாதனை படைத்து உள்ளது.  ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.  அதனுடன், அசாமில் காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்ற சாதனையையும் படைத்து உள்ளது.


Next Story